மனைவியை எரித்துக் கொன்ற வழக்கு: கணவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

மதுபானம் வாங்குவதற்குப் பணம் தர மறுத்த மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால்

மதுபானம் வாங்குவதற்குப் பணம் தர மறுத்த மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் கணவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. தந்தையின் மூன்று குழந்தைகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்ட நபரின் குழந்தைகள் அளித்த வாக்குமூலம் சரியானது என தெரிவித்து அவருக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தனர். மேலும், விசாரணை நீதிமன்ற முடிவில் தலையிடவும் மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், "குழந்தைகள் மூவரும் தங்களது தாய்க்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெளிவாக வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் குற்றம்சாட்டப்பட்ட தந்தையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும், மூன்று குழந்தைகளிடமும் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் போது, எவ்வித முரண்பாடும் இல்லை. இதனால், குழந்தைகள் மூவரும் அளித்த வாக்குமூலம் போதுமானது எனக் கருதி மேல்முறையீடு செய்தவரின் குற்றத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. மேலும், சம்பந்தப்பட்டவர் தனது மனைவியை கொலை செய்ததற்கான குற்றம் விசாரணை நீதிமன்றத்தால் அனைத்து வகையிலும் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இதனால், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
மேலும், "விசாரணை நீதிமன்றம் குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ள போதிலும், குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடவில்லை. 
ஆகவே, தில்லி பாதித்தோர் இழப்பீடு திட்டத்தைப் பொருத்தமட்டில் குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலனை செய்ய இந்த விவகாரம் தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையகத்திற்கு (டிஎஸ்எல்எஸ்ஏ) அனுப்பப்படுகிறது' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி கிஷன் கஞ்ச், நய் பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர், தனது மனைவி மீது மூன்று குழந்தைகளின் கண் எதிரில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொன்றதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது . இந்தச் சம்பவம் 2012, 17 ஆம் தேதி பிற்பகல் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மதுபானம் வாங்க பணம் தர மனைவி மறுத்ததால் கொலை செய்ததாக அந்த நபர் கைது செய்யப்பட்டார். 
இது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் மூன்று குழந்தைகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தன. அதில் தங்களது கண்ணெதிரே தாயைத் தந்தை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். 
மூத்த குழந்தை கூறுகையில், தனது தாயை தந்தை அடித்து உதைத்தாகவும், அதன் பின்னர் அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து எரித்ததாகவும், இதனால், பலத்த காயமடைந்த அவர் அன்று மாலை இறந்ததாகவும் தெரிவித்தது. இந்த சாட்சியத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றம் மேற்கொண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com