மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் அங்கீகாரம் ரத்து: பள்ளிகளுக்கு தில்லி அரசு எச்சரிக்கை

"மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; அந்தப் பள்ளி முதல்வர்கள்

"மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; அந்தப் பள்ளி முதல்வர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்' என தில்லி அரசின் பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து தில்லி கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
மாணவர்களின் பாதுபாப்பு குறித்து தில்லி அரசு, நீதிமன்றம் உள்ளிட்டவை தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அப்படி இருந்தும் பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளுக்கு இணங்க அரைகுறை மனதுடன் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகள் அளித்துள்ள இணக்கப் பதில் கவலையுறச் செய்துள்ளன. இதுபோன்ற சூழலில் பள்ளி வளாகத்துக்குள்ளும், வெளியேயும் மாணவிகள் மீதான உடல்ரீதியான, மனரீதியான, பாலியல் ரீதியான தாக்குதல் குறையவில்லை என்பதில் ஆச்சர்யமில்லை. உண்மையிலேயே, மாணவிகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 
இதுபோன்ற பயங்கரமான சூழலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளுக்கு இணங்க அரைகுறை மனதுடன் ஒப்புதல் தெரிவித்திருப்பதில் எவ்வித பயனும் இல்லை. பள்ளிகளின் நிர்வாகத்தை நம்பி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்புகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளுக்கு பள்ளிகள் இணங்க வேண்டும். 
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளைப் பின்பற்றாத பள்ளி முதல்வர்கள் அல்லது எஸ்டேட் மேனேஜர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைத் எடுக்கப்படும். மேலும், தொடர்ந்து இதுபோன்ற விதி மீறல்கள் இருந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குருகிராமில் உள்ள ரயான் இண்டர்நேஷனல் பள்ளியில் 7 வயது மாணவன் கொல்லப்பட்டது, சாதராவில் 5 வயது பள்ளிச் சிறுமி, என்டிஎம்சி பள்ளிச் சிறுமி ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து தில்லி பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜூலை 25-ஆம் தேதி அறிவித்தது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: மாணவிகளை ஏற்றும் பள்ளி வாகனங்களில் ஆசிரியையோ அல்லது பெண் ஊழியாரோ கட்டாயம் இருக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் பள்ளி வாகனங்களில் மாணவிகளை அனுப்புவதாக இருந்தால், அந்த வாகன ஓட்டுநரின் நடத்தைச் சான்றை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களில் வரும் மாணவர்கள் குறித்த விவரங்கள் குறித்த பதிவேட்டை பள்ளிகள் பராமரிக்க வேண்டும். 
இது தவிர தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களின் பெற்றோர்களுடன் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி முதல்வர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கலந்து ஆலோசிக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் பள்ளி நிர்வாகக் கமிட்டிகள் பாதுகாப்பான, விதிகளுக்கு உள்படும் தனியார் வாகனங்களில் மட்டும் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்களை அறிவுறுத்த வேண்டும். 
இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன் அவை குறித்து பெற்றோர்கள், காப்பாளர்கள் ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பள்ளிகள் பெற வேண்டும். நகரத்தை விட்டு வெளியே செல்ல நேரிடும் போது, மாணவர்களின் பெற்றோர்களின் தொடர்பு எண்களை அவர்களுடன் செல்லும் ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் வாகனத்தில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில் இருக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com