தில்லியில் பலத்த மழை: போக்குவரத்து கடும் பாதிப்பு

தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதி (என்சிஆர்) ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதி (என்சிஆர்) ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மழை நீர் தேங்கியதால் தில்லி, குருகிராமில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தில்லி, என்சிஆர் பகுதியில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. அது முதல் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் புழுக்கத்தில் தவித்து வந்தனர். இதனால், தில்லியில் மின் தேவை 17,000 மெகாவாட்டைக் கடந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஏற்கெனவே, வானிலை ஆய்வு மையமும் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகலில் தில்லி, என்சிஆர் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் திலக் பாலம், மோடி மில் மேம்பாலம், தௌலாகுவான் மேம்பாலம், வெல்கம் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியது. 
இதேபோல், ஜாகிரா மேம்பாலம் கமல் டி பாயிண்ட், ஆனந்த் பிரபாத், பழைய ரயில்வே பாலம் கிசான் காட், ஆசாத் மார்க்கெட், தரம்புரா பழைய இரும்புப் பாலம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக பஹதூர்ஷா ஜஃபர் மார்க் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
மாயாபுரி மேம்பாலம், நரைனா மேம்பாலம், பைரோன் மார்க் ரயில்வே சுரங்கப்பாதை, விமானநிலைய சாலை, தில்லி உயிரியல் பூங்கா அருகே உள்ள மதுரா சாலை, மூல்சாந்த் சந்திப்பு, சதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம், பாபா கதக்சிங் மார்க், ஷாதிபூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. அசோக் விஹார் போக்குவரத்து சிக்னல், ஐஎல்பிஎஸ் மருத்துவமனை சிக்னல் ஆகிய பகுதிகளில் மரங்கள் சாலையில் சாய்ந்தன. 
இதேபோல் குருகிராமிலும் பலத்த மழை பெய்ததால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலத்த மழையின்போது கால்டாக்ஸிகள் கட்டணங்கள் ஏற்றியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். மழையின் காரணமாக தில்லி - குருகிராம் இடையேயான டாக்ஸி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. டாக்ஸிகள் கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டனர்.
எனினும், பலத்த மழையால் கடந்த சில நாள்களாக புழுக்கத்தில் தவித்து வந்த தில்லிவாசிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். தில்லி செகரட்டேரியட் பகுதியிலும் மழை நீர் தேங்கியது. ஐடிஓ பகுதி, இந்திர பிரஸ்தா சாலை, விகாஸ் மார்க், அசோகா சாலை, மண்டி ஹவுஸ் சர்க்கிள், கனாட் பிளேஸ், கஷ்மீரி கேட், லக்ஷ்மி நகர், மகாத்மா காந்தி வட்டச் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மழை தேங்கியாதல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. 
வானிலை அறிவிப்பு: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயர்ந்து 27.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 74 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதற்கிடையே, சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து, அடுத்து வரும் நாள்களிலும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் வியாழன் வரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 36-38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டிவிட்டரில் தில்லி போலீஸ் தகவல் பரிமாற்றம்
தில்லியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்தும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் குறித்தும் தில்லி போக்குவரத்து போலீஸார் சுட்டுரையில் (டிவிட்டர்) அவ்வப்போது தகவல் பரிமாற்றம் செய்தனர். ராம்லீலா மைதானம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஐபி மேம்பாலம், மின்டோ மேம்பாலம், ராஜாபுரி சிக்னல், செக்டர் 1-துவாரகா, இக்னோ சந்திப்பு ஆகிய சாலைகளில்  நீர் தேங்கியிருப்பதால் அந்தச் சாலைகளை தவிர்க்க வேண்டும்' என போக்குவரத்து போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com