தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது ஏப்.18-இல் இறுதி விசாரணை

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாத தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாத தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஏப்ரல் 18-இல் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய சட்ட கமிஷன் பரிந்துரையின்படி, 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் வீதம் இருக்க வேண்டும். தற்போது 10 நீதிபதிகள்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன. கடந்தாண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6,036 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசால் 2014 ஜூலை 30-இல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்புக்கு எதிரான இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவமதிப்பு வழக்கு: இந்த மனுவை 2016, அக்டோபர் 26- ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வன்னியர் சங்க அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அவர்களது விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
 இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு (பிசிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை: இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா,எம். சந்தான கௌடர் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனியார் சட்டக் கல்லூரிகள் புற்றீசல் போல தொடங்குவதை அனுமதிக்க முடியாது. அவற்றைத் தொடங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் வேண்டும். தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பான மனு மீதான இறுதி விசாரணை மார்ச் 2-ஆவது வாரத்தில் நடைபெறும் எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர். 
இந்நிலையில், இது தொடர்பான மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்குரைஞர் கே. பாலு ஆஜராகி, "இந்த வழக்கு நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. கல்வியாண்டு தொடங்க உள்ளதால் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தமிழக அரசு தடையில்லா சான்றை அளிக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, "இந்த வழக்கில் விசாரணை நடைபெற நீதிமன்றமே விரும்புவதால், தமிழக அரசு வாதிட விரும்புகிறது' என்றார்.
இதையடுத்து "தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com