கேஜரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயின் ராஜிநாமா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயின் ராஜிநாமா செய்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயின் ராஜிநாமா செய்துள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் வீட்டில் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், ஜெயினிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.
முதலில் முதல்வர் கேஜரிவாலுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்திருந்த ஜெயின், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார். "சொந்த காரணங்களுக்காகவும், குடும்ப விவகாரங்களுக்காகவும், தில்லி முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அலுவலகத்துக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கும் வி.கே. ஜெயின் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி நகர்ப்புற குடியிருப்பு வளர்ச்சி வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெயின் ஒய்வு பெற்ற பின்பு, முதல்வரின் ஆலோசகராக கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். டியுஎஸ்ஐபி-யின் தலைவராக முதல்வர் கேஜரிவால் உள்ளார்.
இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நள்ளிரவு தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பிறகு, ஜெயின் முதல்வர் அலுவலகத்துக்கு வரவில்லை.
 மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்த ஜெயின் தற்போது  தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம்  நடைபெற்றபோது தான் கழிவறையில் இருந்ததாக கூறியிருந்தார். 
பின்னர் தனது நிலையை மாற்றி,  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் அன்ஷு பிரகாஷை தாக்குவதைப் பார்த்ததாக ஜெயின் வாக்குமூலம் அளித்துள்ளதாக தில்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லாகான், பிரகாஷ் ஜார்வால் ஆகிய இருவரையும் தில்லி போலீஸார் கைது செய்து விசாரித்தனர். 
அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டன. பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com