நாடாளுமன்றத்தில் ஏழாவது நாளாக தொடர்ந்த தமிழக எம்பிக்களின் அமளி!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 7-ஆவது

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், காவிரி விவகாரத்தை மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பினர். அவர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை காண்பித்தவாறு அமளியில் ஈடுபட்டனர். 
அப்போது, "தமிழகத்திற்கு நீதி வழங்கு', " மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு' என குரல் எழுப்பினர். இதேபோன்று, காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சி உறுப்பினர்கள் வேறு விவகாரங்களை எழுப்பினர். இதனால், அவையின் நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்..: மாநிலங்களவை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியபோது, பல்வேறு அறிக்கைகளை அமைச்சர்கள், குழுத் தலைவர்கள் தாக்கல் செய்தனர். அதன் பிறகு, "அவையை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அவை விதிகளின் கீழ் விவாதம் நடத்த அவை தயாராக உள்ளது. மேலும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவைக்குகள் எடுத்து வருவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்' என்று வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். 
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்த் சேகர் ராய், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். இதன் பிறகு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்ப முயன்றார். மேலும், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு வந்தனர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடிய போதும் அதிமுக, திமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை எழுப்பினர். மேலும், இதர எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேறு விவகாரங்களை எழுப்பினர். இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசின் கடமை
மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் தலையாய கடைமை. அதை நிறைவேற்றும் வரை மாநிலங்களவையில் அதிமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்' என்றார்.


தொடர்ந்து குரல் கொடுப்போம்
மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மாநிலங்களவையில் திமுக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இது தொடரும்' என்றார். 

திமுக குரல் கொடுக்கவில்லை
மக்களவை அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் பேசுகையில், "மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது அக்கட்சியின் தலைவர் மத்திய அரசில் துறைகளைக் கேட்டுப் பெற ஆர்வம் காட்டினாரே தவிர, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்திற்காக குரல் கொடுக்கவில்லை. நாங்கள் ராஜிநாமா செய்வதால் தமிழக மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. மாறாக, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களவையில் குரல் கொடுத்து வருகிறோம்' என்றார்.


தமிழகத்துக்கு நியாயம் வேண்டி போராட்டம்
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை பேசுகையில், "தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலின்பேரில்தான் இப்போராட்டம் நடைபெறுகிறது. மக்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com