பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்: நிதியமைச்சரிடம் திருப்பூர் எம்பி மனு

திருப்பூரைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண

திருப்பூரைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி. சத்தியபாமா நேரில் வலியுறுத்தினார். 
இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் கோரப்பட்டுள்ளதாவது: 
திருப்பூர் பின்னலாடை தொழில் துறை, சுமார் ரூ. 26 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதம் அளவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி நடைபெறுகிறது. இத்துறை ஓரளவு படித்த கிராமப்புற பெண்கள் உள்பட பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.
2017, ஜூன் முதல், மாநிலத் தீர்வைகள் மூலம் கிடைக்கும் சலுகைகள் திருப்பி அளிக்கப்படாததால் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை த் துறையைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பணப் பிரச்னையில் உள்ளன. 
ஜிஎஸ்டியில் திருப்பி அளிக்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படாததும் இந்நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது.
இதனால், சந்தைக்கான போட்டி விலையில் ஏற்றுமதிக்கான ஆர்டர்களை ஏற்க முடியாத நிலையில் இந்நிறுவனங்கள் உள்ளன. மாநிலத் தீர்வையில் வழங்கப்படும் சலுகைகள், ஜிஎஸ் டி திருப்பியளிப்பு போன்றவை சரியாகக் கிடைத்திருந்தால் இந்த நிறுவனங்கள் உரிய நேரத்தில் வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தியிருக்கும். ஆயத்த ஆடைகள் துறைக்கு மத்திய அரசு ரூ .6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், அந்த நிதி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய வகையில் சென்று சேரவில்லை. 
எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டியை இணையவழி மூலமாக தாக்கல் செய்ய எளிதான வழிமுறையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வி.சத்யபாமா கூறுகையில், "திருப்பூரின் சிறு, குறு, நடுத்தர பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்த கோரிக்கைகள் அடிங்கிய மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அருண் ஜேட்லி, அவற்றை உரிய வகையில் பரீசிலிப்பதாக உறுயளித்துள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com