சுகேஷின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிப்பு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, தில்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டது.
இதன்படி, நீதிபதி அரவிந்த் குமார் முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் ஆஜரானார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல் அவரிடம் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞர் பி. குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சுகேஷ் ஆஜர்: இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ள சுகேஷ் சந்திரசேகரும் நீதிமன்றத்தில் காலை 11.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சுகேஷ் சந்திரசேகருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சகேஷின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 


புதிய அணிதான் தொடங்குகிறேன்
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறுகையில், "புதிய கட்சி தொடங்கவில்லை. புதிய அணிதான் தொடங்குகிறோம். கட்சியின் பெயர் வியாழக்கிழமை காலை அறிவிக்கப்படும். மதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பர். 
மேலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் உள்ளிட்ட 3 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மட்டுமே அதிமுக கிடையாது. 
ரஜினி, கமல் ஆகியோர் கட்சி ஆரம்பிக்க முழு உரிமை உள்ளது. ஆனால், அம்மா ஆட்சியை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com