தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை: அதிமுக எம்பிக்கு சுஷ்மா ஸ்வராஜ் கடிதம்

இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபாலுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மக்களவையில் பிப்ரவரி 6-ஆம் தேதி கோரிக்கை வைத்திருந்தீர்கள். இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பிப்வரி 16-ஆம் தேதி 113 மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2017-இல் 420 இந்திய மீனவர்களையும், 42 இந்திய மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதில் மத்திய அரசின் ராஜீய முயற்சிகள் காரணமாக இருந்தது தாங்கள் பாராட்டத்தக்கவை. 
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் மீன்பிடி (வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியிருப்பது வெளியுறவு அமைச்சகம் அறியும். அச்சட்டத்தில் உள்ள அபராதம், சிறைத் தண்டனை அதிகரிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் (பாட்டம் டிராலிங்) நடைமுறையால் சுற்றுச்சூழல் தீமைகள் ஏற்படுவது தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய புரிந்தல்கள் உள்ளன. 
2017, மார்ச் மாதத்தில் இருந்து பாக் வளைகுடா பகுதியில் மடிவலைகள் மீன்பிடிப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக உதவிகளை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 
தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கு அதற்கான அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக மீனவர்களிடமிருந்து 506 மனுக்கள் வரப்பெற்று, இதுவரை 364 அனுமதிக் கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக, நீடித்த முறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று அதில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com