நிதி மசோதா நிறைவேற்றத்தின் போது மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் போது நிதி மசோதா நிறைவேறிய தருணத்தின் போது அவர்கள் அமளியை மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், புதன்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 
அவர்களுடன் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இணைந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி குரல் எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், காவிரி விவகாரத்தை மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் பி.குமார் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் திரளாகச் சேர்ந்து குரல் எழுப்பினர். 
அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை காண்பித்தவாறு அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று, காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சி உறுப்பினர்கள் வேறு விவகாரங்களை எழுப்பினர். இதனால், சில நிமிடங்களிலேயே அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
பின்னர், மீண்டும் அவை கூடியபோது மக்களவையில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதி ஒதுக்கீடு மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் அவையின் மையப் பகுதியில் கூடி நின்று குரல் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். 
அந்த அமளிக்கு இடையே நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த அலுவலுக்குப் பிறகு அவையை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில்...:மாநிலங்களவை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும் சிறிது நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை அதிமுக, திமுக உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதேபோன்று, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த வேறு விவகாரங்களை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
பின்னர், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவை கூடிய போதும் அதிமுக, திமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை எழுப்பினர். மேலும், மற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

"மக்கள் இயக்கம் உருவாக்க முயற்சிப்போம்'
கரூர் தொகுதி அதிமுக எம்பியும், மக்களவைத் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அதிமுக உறுப்பினர்களின் உணர்வுக்கு உத்தரவாதமும், மதிப்பும் மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. 
அதேவேளையில், மக்களவையில் விவாதம் இன்றி பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. 
இதுபோன்று மத்திய அரசு செய்து வருவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். நாடாளுமன்ற அவை முடிவுற்றாலும்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஓர் இயக்கமாக உருவாக்க முயற்சி மேற்கொள்வோம். அதே போன்று, தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என்றார்.

"டெல்டா பகுதி பாலைவனமாக மாறும் சூழல்'
மக்களவை அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எட்டு நாள்களாக அதிமுக எம்பிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரிஆற்றுப் படுகையில் பெரும்பாலான பகுதி தமிழகத்தில்தான் உள்ளது. கர்நாடக அரசு அந்த மாநிலத்தில் பல அணைகளைக் கட்டியுள்ளதால், தமிழகத்தின் தஞ்சை டெல்பா பகுதியே ஒரு காலத்தில் பாலைவனமாக மாறும் சூழல் உள்ளது. மேலும், விவசாயிகளின் ஜீவாதாரமும், குடிநீர் ஆதாராமும் பறிபோகும் நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com