"பிங்க் லைன்' மெட்ரோ சேவை தொடக்கம்

தில்லி மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஜ்லீஸ் பார்க் - துர்கா பாய் தேஷ்மூக் சௌத் கேம்பஸ் இடையேயான பிங்க் லைன் மெட்ரோ வழித்தடம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தில்லி மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஜ்லீஸ் பார்க் - துர்கா பாய் தேஷ்மூக் சௌத் கேம்பஸ் இடையேயான பிங்க் லைன் மெட்ரோ வழித்தடம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் மெட்ரோ பவனில் இருந்து இந்த புதிய சேவையைத் தொடக்கி வைத்தனர். மாலை 6 மணிக்கு பயணிகள் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. 
சுமார் 20 கிலோ மீட்டர் தூர வழித்தடம் கொண்ட பிங்க் லைன் மெட்ரோவில் 40 நிமிடம் பயணத்தின் மூலம் தில்லி பல்கலைக்கழகத்தின் நார்த், சௌத் கேம்பஸ்களை இணைக்கிறது. 
மொத்தம்  12 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த  வழித்தடத்தை கடந்த பிப்ரவரி 26-28ஆம் தேதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. 
மஜ்லீஸ் பார்க், ஆஸாத் பூர், ஷாலிமார் பாக், நேதாஜி சுபாஷ் பிளேஸ், ஷக்குர்பூர், பஞ்சாபி பாக் மேற்கு, இஎஸ்ஐ மருத்துவமனை, ரஜோரி கார்டன், மாயாபுரி, நரெய்னா விஹார், தில்லி கேன்ட், துர்கா பாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் ஆகிய 12 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. 
மஜ்லீஸ் - துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ்  வரை செல்ல ரூ. 40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஷ்வவித்யாலையா - துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் வரை செல்ல ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ 3-வது விரிவாக்கத் திட்டத்தில் மஸ்லீஸ் பார்க்  (ஷிவ் விஹார் காரிடர்) பிங்க் லைன் 7- திட்டம் மொத்தம் 59 கி.மீ. தூரம் கொண்டது. இதில் மஜ்லீஸ் பார்க், துர்கா பாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் இடையே 21.56 கி.மீ. தூரம் கொண்டதாகும். இதை 34 நிமிட பயணத்தில் கடந்துவிடலாம். அதேபோல் விஷ்வவித்யாலையை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து துர்கா பாய் தேஷ்முக் சௌத் கேம்பஸுக்கு, ஆஸாத் பூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல சுமார் 40 நிமிடங்கள் ஆகும்.
ஆஸாத்பூர் (எல்லோ லைன்), நேதாஜி சுபாஸ் பிளேஸ் (ரெட் லைன்), ரஜோரி கார்டன் (புளூ லைன்) ஆகிய ரயில் நிலையங்கள் இந்த புதிய வழித்தடத்தில் 3 சந்திப்பு ரயில் நிலையங்களாக உள்ளன.
தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு கேம்பஸிஸ் இருந்து தெற்கு கேம்பஸிற்கு பிங்க் மெட்ரோ வழித்தடத்தில் இனி சென்று வரலாம். 
மொத்தம் 19 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சௌத் கேம்பஸ் - ஷக்குர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் 3 நிமிடம் 12 நொடி இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஷக்குர்பூர், மஜ்லீஸ் பார்க் இடையே 5 நிமிடம் 12 நொடி இடைவெளியில் கூட்ட நெரிசல் மிக்க நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. 
ரஜோரி கார்டன், சௌத் கேம்பஸ் சந்திப்புகளில் முதல் முறையாக தானியங்கி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
பிங்க் லைன் புதிய வழித்தடத்தின் மூலம் துவாரகா 21 (புளூ லைன்) - ரிதாலா (ரெட் லைன்) இடையேயான பயண தூரம் 16 நிமிடங்கள் குறையும். ரஜோரி கார்டன் - ஆஸாத்பூர் இடையேயான பயண தூரம் 23 நிமிடங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

4-வது வழித்தடத்துக்கு விரைவில் அனுமதி - கேஜரிவால்
தில்லி மெட்ரோ 4-வது விரிவாக்கத் திட்டத்தடத்துக்கு தில்லி அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். பிங்க் லைன் மெட்ரோ வழித்தடம் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
தில்லியின் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரயில்  உயிர்நாடியாக திகழ்கிறது. தில்லி மெட்ரோ 4-வது விரிவாக்கத் திட்டத்துக்கு தில்லி அரசு விரைவில் அனுமதி அளிக்கும். அந்த வழித்தடத்தில் உள்ள சில இடங்களில் நிதி ஆதார பிரச்னை உள்ளதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது' என்றார். தில்லி அரசும், மத்திய அரசு கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என்று மெட்ரோ கட்டணம் கடந்த முறை உயர்த்தப்பட்டபோது கேஜரிவால் கூறியிருந்தார்.


மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது - மத்திய அமைச்சர்
தில்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மாநில அரசு நிதி உதவி அளிக்கவில்லை என்றால், மத்திய அரசின் நிதி உதவியுடன் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
தில்லியையும், மீரட்டையும் இணைக்கும் ராபிட் ரயில் திட்டத்துக்கும், தில்லி மெட்ரோ 4-வது விரிவாக்கத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்காமல் தில்லி அரசு காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த தாமதத்தால் தில்லி மெட்ரோ 4-வது விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ. 12,000 கோடியும், ராபிட் ரயில் திட்டத்துக்கு ரூ. 1,00 கோடியும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com