சேவை செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை வீணடிக்கக் கூடாது: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி

"சக மனிதர்களுக்கு சேவை செய்யக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வீணடிக்கக் கூடாது' என ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார். 

"சக மனிதர்களுக்கு சேவை செய்யக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வீணடிக்கக் கூடாது' என ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார். 
அகில இந்திய அளவிலான "பாரத் யாத்ரா' ஆன்மிகப் பயணத்தை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இந்தப் பயணத்தை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தார். இதன் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் தில்லியில் முகாமிட்டுள்ளார். 
தில்லி வசந்த் குஞ்சில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் வியாழக்கிழமை அவர் பக்தர்களைச் சந்தித்தார். இதையொட்டி, மடம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் காலை 11 மணி அளவில் வந்தார். காலை 11-12 மணி வரை மாதா அமிர்தானந்தமயியின் சத்சங்கம் நடைபெற்றது. சத்சங்கத்தை அவர் மலையாளத்தில் மேற்கொள்ள, அது உடனுக்குடன் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. 
அதன் பிறகு நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும் பஜனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மாதா அமிர்தானந்தமயியுடன் சேர்ந்து பஜனைப் பாடல்களை பாடினர். இந்தப் பஜனை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் மாதா அமிர்தானந்தமயியின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் தியானத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பக்தர்களுக்கு மாதா அமிர்தானந்தமயி தரிசனம் அளித்தார்.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே ஆரத் தழுவி அவர் அருளாசி வழங்கினார். டோக்கன் அடிப்படையில் தரிசனம் நடைபெற்றது. மாதா அமர்தானந்த மயியின் அருளாசியைப் பெறுவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
முன்னதாக, சத்சங்கத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி கூறியதாவது: சக மனிதர்களுக்கு சேவை செய்யக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வீணடிக்கக் கூடாது. தீவிரவாதம், வன்முறை, தற்கொலை, கொலை போன்றவை தாராளமாக நடைபெற்று வரும் மிகவும் மோசமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரிடமும் உண்மையான அன்போ, காதலோ இல்லை. மக்கள் அனைவரும் போலியான முகமூடிகளை அணிந்து வாழ்கின்றனர். 
முகநூலில் பல்லாயிரக்கணக்கான நண்பர்களை வைத்துள்ளவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் கூட இல்லை. இந்த நிலையைச் சரி செய்ய மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும். 
பணத்தின் பின்னால் ஓடுவதைத் தவிர்த்து, வாழ்வதற்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக வாழ்க்கை இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பொருள்கள் மீது ஆசை கொள்ளும் மனிதர்கள் மனத்தளவில் பலவீனமாகிவிடுவார்கள். எனவே, பொருள்கள் மீது மக்கள் ஆசை கொள்ளக் கூடாது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com