தலைமைச் செயலர் விவகாரம்: சிசோடியாவிடம் 3 மணி நேரம் விசாரணை

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம்

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக, இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் காவல்துறையினர் கடந்த 18-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர். சிவில் லைன்ஸில் உள்ள கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. மதுரா சாலையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில், துணை ஆணையர் ஹரேந்திர சிங் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ஹரேந்திர சிங் கூறியதாவது:
தலைமைச் செயலர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் சிசோடியாவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினோம். சுமார் 125 கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இதர கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் திருப்திகரமாக உள்ளன. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததும் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும். தற்போது விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. தேவைப்பட்டால் சிசோடியாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர். விசாரணை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னணி: கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அன்ஷு பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 23-இல் சிவில் லைன்ஸில் உள்ள முதல்வர் இல்லத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, கேமராவின் ஹார்டு டிஸ்கை மீட்டு, தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பினர். அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், சம்பவத்தன்று கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதல்வர் கேஜரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கேஜரிவாலிடமும் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசு மீது தாக்கு
தன்னிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது தொடர்பாக மத்திய அரசை சிசோடியா சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதற்கு, காவல்துறையினரையும் இதர விசாரணை அமைப்புகளையும் மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஊழல், கல்வி கட்டணக் கொள்ளை உள்ளிட்டவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு ஆம் ஆத்மி அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிசோடியா கூறியுள்ளார்.
தலைமைச் செயலர் மீது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புகார்
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தில்லி சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தை நடத்தக் கூடாது என்று பேரவை அதிகாரிகளை தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் மிரட்டுவதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவர்களாக உள்ள சௌரப் பரத்வாஜ், ராக்கி பிர்லா, சஞ்சீவ் ஜா, மதன் லால், விசேஷ் ரவி ஆகிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி சட்டப் பேரவையின் 3 நாள் கூட்டத் தொடர் ஜூன் மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கேள்வி நேரத்தை நடத்தக் கூடாது என்று பேரவை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பேரவை அதிகாரிகளை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி மிரட்டுகிறார். கேள்வி நேரம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அமைச்சரவைக்கோ, தலைமைச் செயலருக்கோ கிடையாது. அந்த அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com