தெற்கு தில்லியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 குடியிருப்புகள்!

தெற்கு தில்லியில் நெளரோஜி நகர், நேதாஜி நகர் ஆகிய இரு இடங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் சுமார் 5,000 உயர்

தெற்கு தில்லியில் நெளரோஜி நகர், நேதாஜி நகர் ஆகிய இரு இடங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் சுமார் 5,000 உயர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. எப்போதும் மிகவும் பரரப்பாகக் காணப்படும் ரிங் ரோட்டின் இரு புறங்களிலும் அமையவுள்ள இக்குடியிருப்புகள் கட்டும் பணி 2020, ஜூன் மாதம் நிறைவடையும்.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த இரண்டு காலனிகளிலும் மொத்தம் 5,000 குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் . மேலும், உலக வர்த்தக மையம், நவீன வசதிகள் மற்றும் உயர் தொழில் நுட்ப உள்கட்டமைப்புடன் கூடிய வணிக வளாகங்களும் இதில் இடம் பெறுகின்றன.
நெளரோஜி நகரில் அமைக்கப்படவுள்ள உலக வர்த்தக மையம், 24 வணிக வளாக கோபுரங்கள் ஆகியவற்றுக்கு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு சில நாள்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இந்தக் குடியிருப்புத் திட்டத்தின் மூலம் ரூ.12,000 கோடியும், சரோஜினி நகரில் அமைக்கப்படும் வணிக இடங்கள் விற்பனை மூலம் ரூ.20,000 கோடியும் திரட்ட முடியும் என அரசு எதிர்பார்க்கிறது. இந்த மொத்தத் தொகையும் 7 அரசுக் குடியிருப்புக் காலனிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.
இவற்றில் சரோஜினி நகர், நெளரோஜி நகர், நேதாஜி நகர் இடங்களில் உள்ள அரசுக் காலனிகளில் மறுசீரமைப்பு பணிகளை தேசிய கட்டட கட்டுமான கழகம் (என்பிசிசி) மேற்கொள்ளும். அதேபோல, தெற்கு தில்லியில் உள்ள மற்ற 4 காலனிகளின் மறுசீரமைப்புப் பணிகளை மத்திய பொதுப்பணித் துறை மேற்கொள்ளும். மொஹம்மத்பூர், ஸ்ரீநிவாஸ் புரி, தியாகராஜ் மார்க், கஸ்தூர்பா நகர் ஆகிய இடங்களில் இந்த 4 காலனிகளும் உள்ளன. இந்த 7 காலனிகளின் மறுசீரமைப்புக்குப் பிறகு மொத்தம் 26,000 குடியிருப்புகள் அரசு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும். இந்தக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மொத்தப் பரப்பரளவு சுமார் 135 ஏக்கர்கள். இங்கு இப்போதுள்ள குடியிருப்புகள் 3,400. இரண்டு காலனிகளிலும் மறு சீரமைப்புக்குப் பிறகு மொத்தம் 4,855 குடியிருப்புகள் அமையும். மேலும், கூடுதலாக 5,36,662 சதுர மீட்டர் பரப்பரளவில் வணிக வளாகங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு அமைக்கப்படும வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 9815 கார்களை நிறுத்த முடியும். இங்கு பள்ளி, பயிற்சி மையங்கள், மார்க்கெட், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், மண்டல சுகாதார மையங்கள், அஞ்சல் நிலையம் ஆகியவை இடம் பெறுகின்றன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து என்பிசிசி வட்டாரங்கள் கூறுகையில், குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை இப்போதுதான் எங்கள் நிறுவனம் முதல் முதலாக மேற்கொண்டுள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள் பராமரிப்புப் பொறுப்பை அவற்றைக் கட்டும் நிறுவனம்தான் 30 ஆண்டுகளுக்கு ஏற்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com