மருத்துவர்கள்-நோயாளிகள் உறவு மேம்பட வேண்டும்: அனில் பய்ஜால்

நல்ல சுகாதாரத்துக்கு மருத்துவர்கள் - நோயாளிகள் உறவு மேம்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் வலியுறுத்தினார்.

நல்ல சுகாதாரத்துக்கு மருத்துவர்கள் - நோயாளிகள் உறவு மேம்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் வலியுறுத்தினார்.
மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் இடையேயான புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில், தில்லியில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
மனிதகுலத்துக்கு ஆற்றும் சேவையில் மருத்துவ சேவை உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. கால மாற்றத்தால், மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் இடையேயான உறவும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. நோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்புகள் குறித்த நல்ல புரிதல்களே மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் இடையேயான உறவை மேம்படச் செய்யும்.
இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மை, வலிந்து சண்டைக்கு போதல் ஆகியவை மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் இடையேயான உறவைப் பாதித்து வருகிறது.
மிக உன்னதமான பணியாக உள்ள மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளது. நோயாளிகளோ, நோயாளிகளின் உறவினர்களோ மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அண்மையில் வெளியான சர்வதேச ஆய்வில், இந்தியாவில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் நோயை கண்டறியவும், மருந்துகளை பரிந்துரைக்கவும் 2 நிமிடம் மட்டுமே செலவிடுவதாகத் தெரிவிக்கிறது. எனவே, நோயாளிகளிடம் குறைந்த மணித்துளிகள் செலவிட்டால் மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் இடையேயான உறவு அர்த்தமுள்ளதாக அமையாது. நோயாளிகளிடம் மருத்துவர்கள் பரிவுடன் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும் என்றார் அனில் பய்ஜால்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ரவி வான்கடேகர் பேசுகையில், சுகாதாரத் துறையில் நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களால் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அச்சமின்றி பணிபுரியும் சூழலை மருத்துவர்களுக்கு உருவாக்க வேண்டும். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை மறுக்கக் கூடாது' என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் வினய் அகர்வால் பேசுகையில், மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு எதிரான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், 17 மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.
ஆனால், மத்திய அரசு சார்பில் இதுவரை சட்டம் இயற்றப்படாததால் மாநிலங்கள் தாங்கள் இயற்றியுள்ள சட்டத்தை அமல்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. எனவே, மத்திய அரசு உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.
இந்த கருத்தரங்கில் இந்திய மருத்துவ சங்கத்தின் கெளரவப் பொதுச் செயலாளர் ஆர். என். தாண்டன், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஏ.கே. ரவிக்குமார், ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com