மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பது உறுதி: அமித் ஷா நம்பிக்கை

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில், எந்தவிதமான சவால்களோ,

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில், எந்தவிதமான சவால்களோ, சிக்கல்களோ தங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உருவானால் அது பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும் என வெள்ளிக்கிழமை அமித் ஷா தெரிவித்த கருத்து கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில், தற்போது அதற்கு நேர்மாறான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 5-ஆம் ஆண்டில் மத்திய அரசு அடியெடுத்து வைக்கும் நிலையில், அதனை விமரிசையாகக் கொண்டுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பாஜக செய்துள்ளது.
இத்தகைய சூழலில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தில்லியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு முன்னெடுத்த திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார். அதற்கு நடுவே அரசின் மீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு அமித் ஷா பதிலளித்துப் பேசியதாவது:
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சாமானியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் 22 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கின்றன.
இதைத் தவிர, லட்சக்கணக்கான வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நேரடி மானியத் திட்டம், கழிப்பறை வசதி என பல்வேறு நலத் திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் மோசமான நிர்வாக செயல்பாடுகளால் முடங்கிக் கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் மோடிதான் மீட்டெடுத்துள்ளார். அதனால்தான் அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இறுகிய பாறை போல உறுதியாக இருக்கிறது.
ஆனால், அதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால் பிரதமராகப் பதவியேற்கத் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கருத்தை அவரது சொந்தக் கட்சித் தலைவர்கள்கூட ஆதரிக்கவில்லை. அதேபோன்று காங்கிரஸ் தலைமையில் அணி சேர்ந்திருக்கும் மாற்றுக் கட்சியினரும் அதனை ஆதரிக்கவில்லை.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி. அதில் எந்த சவாலும் எங்களுக்கு இல்லை. நாட்டில் உள்ள வறுமையையும், கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி போராடுகிறார். எதிர்க்கட்சிகளோ மோடியை ஒழிக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com