குடியிருப்பு பகுதிகளில் இன்னமும் 5 ஆயிரம் தொழிற்சாலைகள்: உச்சநீதிமன்றம் கவலை

சட்ட விரோத தொழிற்சாலைகளை மூட கண்காணிப்பு குழு அமைத்து 14 ஆண்டுகளாகியும் இன்னமும் 5,000 தொழிற்சாலைகள்

சட்ட விரோத தொழிற்சாலைகளை மூட கண்காணிப்பு குழு அமைத்து 14 ஆண்டுகளாகியும் இன்னமும் 5,000 தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.
இதையடுத்து, தில்லி தலைமைச் செயலர் தலைமையிலான குழு, இதுபோன்ற சட்ட விரோத தொழிற்சாலைகளை 15 நாள்களில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
தில்லி சீலிங் விவகார வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபர் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி தலைமைச் செயலர் தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை குறிப்பிட்ட நீதிபதிகள், "தில்லியில் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வந்த 21,962 தொழிற்சாலைகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகும் அவர்கள் அந்த இடத்திலேயே இயங்கி வருவதாகவும், அதில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 15,888 சட்ட விரோத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 ஆயிரம் சட்ட விரோத தொழிற்சாலைகள் 15 நாள்களில் மூட அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலைகளின் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைத்து 14 ஆண்டுகளாகியும் மேலும் 5 ஆயிரம் சட்ட விரோத தொழிற்சாலைகள் நடைபெற்று வருவது துரதிருஷ்டவசமானது. தில்லி தலைமைச் செயலர், தில்லி காவல் துறை ஆணையர், மூன்று மாநகராட்சி ஆணையர்கள், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் ஆகியோர்  இந்தக் குழுவில் இடம்பெற்ற பின்பும் சட்ட விரோத தொழிற்சாலைகளை மூட முடியவில்லை. இந்த தொழிற்சாலைகளை 15 நாள்களில் மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com