அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பு: புகைப்படங்களை வெளியிட்டார் அமைச்சர் இம்ரான் ஹுசேன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான்

அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன், இது தொடர்பான புகைப்படங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
மேலும், பயிர்க் கழிவு எரிப்புப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் வகையில், அண்டை மாநில முதல்வர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டாமல் உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தில்லி - சண்டீகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஹரியாணா, பஞ்சாப் மாநில பகுதிகளில் பயிர்க் கழிவுகள் கட்டுக்கடங்காத வகையில் எரிக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதுபோன்ற பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்களை தேசிய நெடுஞ்சாலையை ஓட்டிய பகுதியில் வெளிப்படையாக தெரியும் நிலையில், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நிலையைக் கேட்கவே வேண்டாம்.
இந்த நிலையானது, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள நாட்டுப்புறங்களில் பரவலாக கழிவுகள் எரிக்கப்படுவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இந்த சூழலானது, வரக்கூடிய வாரங்கள், மாதங்களில் தில்லியில் காற்றின் சுற்றுப்புறத் தரம் மிகவும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும். பயிர்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 
ஆனால், மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களும் இதைத் தடுக்க எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது.
இந்த விரும்பத்தகாத சூழல் தடுக்கப்பட வேண்டும். மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களும் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டால், வரக்கூடிய நாள்களில் காற்றின் மாசில் இருந்து வட இந்தியாவைக் காக்க முடியும். ஏழை விவசாயிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை போதிய அளவில் வழங்கப்படவில்லை. இதன் மூலம், மீண்டும் விவசாய பயிர்க் கழிவுகளை எரிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். 
பயிர்க் கழிவு எரிப்புப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் வகையில், அண்டை மாநில முதல்வர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டாமல் உள்ளது என்றார் அமைச்சர் இம்ரான் ஹூசேன். மேலும், பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com