சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானர். 
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை மீது நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் தேவேந்தர குமார் ஆஜராகி, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பாக வாதங்களை முன்வைத்தார். 
இதற்கு டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதீர் நந்தரஜோக் மறுப்பு தெரிவித்து முன்வைத்த வாதம் வருமாறு:
ஹயாத் ஹோட்டல் அறையில் கடந்த 2017, ஏப்ரல் 16-இல் ரூ. 1.30 கோடி கைப்பற்றப்பட்டது. ஹோட்டல் மேலாளரிடம் பிரதான சாவி (மாஸ்டர் கீ) பெறப்பட்டு அந்த அறை மீண்டும் அதற்கு மறுநாள் திறக்கப்பட்டுள்ளது. அப்போது குறுந்தகடு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் குறுந்தகடு முதல் நாள் சோதனையில் கைப்பற்றபடவில்லை. குரல் பதிவு மாதிரிகளை (வாய்ஸ் சேம்பிள்) அளிக்கத் தவறியதால், இதை அவருக்கு எதிராக எடுத்துக் கொள்ளக் கூடாது. குரல் பதிவு மாதிரிகளை அளிப்பதும், மறுப்பதும் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையாகும். ஏற்கெனவே, குரல் பதிவு மாதிரி தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது.
குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உரையாடல்கள் அடங்கியதாகக் கூறப்படும் சி.டி. தயாரிக்கப்பட்டதற்கான எவ்வித மென்பொருளும், கருவியும் அறையில் கண்டெடுக்கப்படவில்லை. ஊழல் தடுப்புச் சட்டம் 1998, பிரிவு 8-இன் படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதலாவது நபரான சுகேஷ் சந்திரசேகர், அரசு ஊழியர் அல்ல. எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிடிவி தினகரன், சட்டத்திற்குப் புறம்பாக முறைகேட்டில் ஈடுபட்டாரா என்ற கேள்விக்கே இடமில்லை. ஊழல் தடுப்புச் சட்டம் 1998, பிரிவு 8-இன்படி டி.டி.வி. தினகரனுக்கு எதிராக எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. சி.டி.யில் இடம் பெற்றுள்ள குரல் பதிவு மாதிரி தொடர்பான தடயவியல் ஆய்வில் மொத்தம் உள்ள 7 மாதிரிகளில் 6 எதிராகவும், ஒன்றில் மட்டும் மொழிசார் ஒப்புமை இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் படி குரல் பதிவு செய்யப்பட்ட கருவி ஏதும் கைப்பற்றப்படவில்லை. மேலும், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளோ, பிற அரசு ஊழியரோ குற்றம்சாட்டப்பட்டவராக வரிசைப்படுத்தப்படவில்லை என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7-ஆவது நபரான பி. குமார் சார்பில் வழக்குரைஞர் என். ஹரிகரண் ஆஜராகி, "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திர சேகர் தொடர்புடைய மோசடி உள்ளிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 21-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பி. குமார் வழக்குரைஞராக இருந்தவர். அவரை தொலைபேசியில் அழைத்தது சுகேஷ் என தெரிய வந்திருந்தால் அவர் பேசியிருக்க மாட்டார். மாறாக சிராக் பாஸ்வான் பேசுவதாகக் கூறியதால்தான் பேசியுள்ளார். மேலும், டி.டி.வி. தினகரனின் தொலைபேசி எண்ணை குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு அளித்ததற்காக வழக்குத் தொடுக்க முடியாது' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனைய நபர்கள் அடுத்த விசாரணையின்போது வாதாட அனுமதிஅளித்து உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு காரணங்களைக் கருதி குற்றம்சாட்ட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் அடுத்த விசாரணையின் போது காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தினால் போதும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com