பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்: முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியது தில்லி அரசு

தில்லியில் பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் நடவடிக்கையை தில்லி

தில்லியில் பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் நடவடிக்கையை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, கடந்த 2011 ஜனவரி 1 முதல் 2012 ஏப்ரல் 30 வரையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் மாற்றப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நம்பர் பிளேட்டுகள் மாற்ற நடவடிக்கையை தொடங்கியுள்ள தில்லி அரசு, அதை பல கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது. தில்லியில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் நடவடிக்கை கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. எனவே, அதற்கு முன்பான சுமார் 40 லட்சம் வாகனங்களில் இந்த புதிய நம்பர் பிளேட்டுகள் இல்லை.
அத்தனை வாகனங்களுக்கு ஒரே நேரத்தில் நம்பர் பிளேட்டுகளை மாற்றும் நடவடிக்கை கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், தில்லி அரசு அந்தப் பணியை பல கட்டங்களாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. முதல்கட்டத்துக்கான கால அவகாசத்தை அரசு பின்னர் அறிவிக்கவுள்ளது.
தில்லியில் இத்தகைய நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை மேற்கொள்ள 13 மையங்களே அங்கீகரிக்கப்பட்டவைகளாக உள்ளன. அவற்றை "‌w‌w‌w.‌h‌s‌r‌p‌d‌e‌l‌h‌i.​c‌o‌m''  என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதுடன், சம்பந்தப்பட்ட வாகனம் எத்தகைய எரிபொருளில் இயங்குகிறது என்பதை குறிப்புணர்த்தும் "ஹாலோகிராம்' ஒளிரும் பட்டைகளும் இந்த மையங்களின் மூலமாக ஒட்டப்படுகின்றன.
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்த, வாகனத்தின் உரிமையாளர்கள் தங்களது வாகன பதிவின் அசல் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். 
கூட்ட நெரிசலை தவிர்க்க, நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கான முன்பதிவை இணையதளத்தில் மேற்கொள்ளவும், அதிலேயே அவற்றுக்கான கட்டணங்களை செலுத்தவும் தில்லி போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com