பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி: கேஜரிவாலுக்கு குடியிருப்போர் நலச் சங்கங்கள் கோரிக்கை

தில்லியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர்

தில்லியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சமூதாயக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரியில் லிட்டருக்கு ரூ.1.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் மீதான விலையில் லிட்டருக்கு தலா ரூ. 1 வீதம் குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 
அப்போது, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை  ரூ.2.50 என்ற வீதத்தில் குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் ஆளும் 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கப்பட்டது.
இதேபோல தில்லியிலும் எரிபொருள்களின் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை வலியுறுத்தி அக்கட்சியினர் மாட்டு வண்டி பேரணி, சைக்கிள் பேரணி நடத்தினர். ஆனாலும், தில்லி அரசு விலைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவாகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், ஆளும் ஆம் ஆத்மி அரசை கடுமையாகச் சாடி வருகிறது. 
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க குடியிருப்போர் நலச் சங்கங்களும் தில்லி  முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து தில்லி குடியிருப்போர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.கே. அரோரா கூறியதாவது:
மத்திய அரசின் விலை குறைப்பை அடுத்து, அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்டவை பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. எனவே, தில்லியிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தில்லி அரசு இக்கோரிக்கையை ஏற்றால் தில்லி வாசிகள் சற்று பயனடைவார்கள் என்றார் அவர்.
மகளிர் பரகதிஷீல் அசோசியேஷன் செயலாளர் ரிது பாட்டியா கூறுகையில், "தில்லியில் பொதுப் போக்குவரத்து தேவையான அளவு இல்லை. கட்டணங்களும் மலிவாக இல்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருவதால் அனைத்துத் தரப்பினரும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்' என்றார்.
ஆனந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த மணிஷ் செளலா கூறுகையில், "ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அருகே உள்ள அந்த மாநில எல்லைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தில்லிவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com