தலைநகரில் ஐயப்ப பக்தர்கள் பிரமாண்ட பேரணி

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் "சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் தெய்வீக கோஷம் ஆங்காங்கே ஐயப்பப் பக்தர்களின்

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் "சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் தெய்வீக கோஷம் ஆங்காங்கே ஐயப்பப் பக்தர்களின் வீடுகளிலும், ஐயப்பன் ஆலயங்களிலும் கேட்பது வழக்கம். ஆனால், தேசத் தலைநகர் தில்லியில் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஆர்ப்பரிக்கும் நாடாளுமன்றச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று "சுவாமியே சரணம் ஐயப்பா' பக்தி கோஷம் விண்ணில் எதிரொலித்ததைக் காண முடிந்தது. 
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஆன்மிகவழி பேரணி, ஆர்ப்பாட்டம் தில்லி நாடாளுமன்றச் சாலைப் பகுதியில் நடைபெறும் என்று ஐயப்பா தர்ம சம்ரக்ஷனா சமிதி அமைப்பு அறிவித்திருந்தது. 
இதன்படி, தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் நாடாளுமன்றச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் குவியத் தொடங்கினர். இதையொட்டி, அந்தப் பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
அதிகளவில் பெண் பக்தர்கள்: பிற்பகல் 3 மணியளவில் ஏராளமான பக்தர்கள் பூரண கும்ப குடையைக் கையில் ஏந்தியும், புலிமேல் வரும் ஐயப்பனின் உருவப்படத்தை ஏந்தியும் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தனர். பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, ஐயப்பன் அவதாரத்தின் முக்கியத்துவம், சபரிமலையில் கடைப்பிடிக்கப்படும் ஆசார, அனுஷ்டான நடைமுறைகள் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விளக்கினர். மேலும், பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும், தீர்ப்பு மறுஆய்வு செய்யப்படுவதற்கான அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் அதிகமான அளவில் பெண்கள் கூடியிருந்தனர். ஆண்களில் பலர் கருப்பு வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர்.
பக்திப் பரவசம்: ஒவ்வொரு முறையும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட மேடையில் முக்கிய நபர்கள் பேசியபோது, மேடையின் முன் பகுதியில் வீற்றிருந்த ஏராளமான பெண் பக்தர்களும், மேடையின் இரு புறங்களிலும் நின்றிருந்த ஆண் பக்தர்களும் சுவாமியே சரணம் ஐயப்பா எனும் பக்தி கோஷத்தை பரவசத்துடன் உரத்த குரலில் ஒலித்தனர். கூட்டத்தில் அவ்வப்போது பக்திகோஷம் விண்ணைப் பிளக்கும் வகையில் ஒலித்தது. அப்போது, வானத்தில் கருடன் (பருந்து) வட்டமிட்டதால் பக்தர்கள் மேலும் சரண கோஷத்தை உரத்தவாறு கூறினர். 
பந்தளம் ராஜா: இதில் பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகம் திருநாள் கேரள வர்மா,சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது: வரலாற்றுத் தகவலின்படி, சுவாமி ஐயப்பன் பந்தளம் அரச குடும்பத்தின் வளர்ப்பு மகனாகக் கருதப்படுகிறார். சபரிமலையில் ஐயப்பன் சமய நம்பிக்கையுடன் உண்மை உணர்வுடன் வழிப்படப்படுகிறார். கடவுள் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறுவிதமாக கருதப்படுகிறார். ஆனால் கடவுளின் சக்தியானது ஒன்றுதான் என்பது என் நம்பிக்கை.
ஐயப்பனுக்கு பக்தர்களால்
சடங்குகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. இவை ஷேத்ரஜன், தந்திரிகளால் ஏற்படுத்தப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பு பந்தளம் ராஜா, ஷேத்ரஜனாக இருந்தார். ஏனெனில், தவம் இருப்பதற்காக ஐயப்பனின் அறிவுரையின் பேரில் கோயிலை அவர்கள்தான் எழுப்பினர். தான் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருந்ததால் சபரிமலைக்கு யாரும் வர வேண்டாம் என ஐயப்பன் கூறினார். எனினும், ஆண்டுக்கு ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தில் மட்டும் பந்தள ராஜாவை சபரிமலைக்கு வர அவர் அனுமதி அளித்தார். இதனால்தான், பந்தளத்தின் யுவ ராஜாவான சுவாமி ஐயப்பனை அலங்கரிப்பதற்காக அரசர் திருவாபரணங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்.
ஆனால், காலப்போக்கில் படிப்படியாக, சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சென்றுவரத் தொடங்கினர். நைஷ்டிக பிரம்மச்சாரி 41 நாள்கள் தவத்திற்குப் பிறகுதான் வணங்கப்பட வேண்டும். பக்தர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதுடன், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இந்தக் காலத்தில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தச் சடங்குகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் போதுதான் சுவாமி சிலையானது புனிதமாகும்.
இந்நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அனைத்து உண்மையான ஐயப்பப் பக்தர்களுக்கு முழு அதிருப்தியை அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஏற்கெனவே பந்தளம் அரச குடும்பத்தினர் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் மீது தீவிர நம்பிக்கை கொண்டுள்ள உண்மையான பக்தர்கள் அனைவரும் நல்லதொரு பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் என்றார் அவர். 
இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி. ஆனந்த போஸ், மக்களவை முன்னாள் தலைமைச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி, ஐயப்பா தர்ம சம்ரக்ஷனா சமிதியின் அமைப்பாளர்களில் ஒருவரும் தில்லி மலையாளிகள் சங்கத் தலைவருமான பாபு பணிக்கர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் உஷா நந்தினி, நாயர்கள் சேவை சங்கத்தின் (எஸ்எஸ்எஸ்) தலைவர் எம்.கே.ஜி. பிள்ளை, நவோதயம் தில்லி பிரிவுத் தலைவர் எம்.பி. பாலகிருஷ்ணன், மயூர் விஹார் ஃபேஸ் 3 ஐயப்பன் கோயில் தலைவர் எம்.டி. ஜெயப்பிரகாஷ், ஐயப்பா தர்ம சம்ரக்ஷனா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரனிக்கல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பாபு பணிக்கர் கூறுகையில், "இந்த ஆன்மிக அறவழிப் போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. தில்லி, என்சிஆர், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com