தில்லியில் காவலர் நினைவு தின அணிவகுப்புஆணையர், அதிகாரிகள் பங்கேற்பு

பணியின்போது உயிரிழந்த காவலர்களின்  நினைவு தின அணிவகுப்பு நிகழ்ச்சி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை

பணியின்போது உயிரிழந்த காவலர்களின்  நினைவு தின அணிவகுப்பு நிகழ்ச்சி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தில்லி காவல் துறை ஆணையர் அமுல்ய பட்நாயக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
2017,  செப்டம்பர் 1 முதல் 2018,  ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணியின் போது உயிரிழந்த காவல் துறையினரின் நினைவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கிங்ஸ்வே முகாமில் உள்ள நியூ போலீஸ் லைனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  தில்லி காவல் துறையின் ஆணையர் அமுல்ய பட்நாயக் பங்கேற்று பணியின் போது உயிரிழந்த தில்லி போலீஸார் 13 பேர் மற்றும் மாநில, மத்திய காவல் படை வீரர்களின் பெயர்களை வாசித்தார்.
இதே காலக்கட்டத்தில், பல்வேறு படைகளைச் சேர்ந்த  414 போலீஸார் உயிரிழந்தனர். அவர்களில் தில்லி காவல் துறையைச் சேர்ந்த 13 பேரும் அடங்குவர். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 2 போலீஸாரும் வீரமரணம் அடைந்துள்ளனர். 
இது தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை,  மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை,  மத்திய ரிசர்வ் காவல் படை,  இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை , தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றவைச் சேர்ந்த வீரர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தில்லி காவல் துறையைப் பொருத்தமட்டில் 2017,  செப்டம்பர் 1 முதல் 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் கஜன் சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் தரம்பீர் சிங், கணேஷ் தாஸ் கர்டாம், அசோக் குமார், ஓம்பால் சிங்,  மஹாபீர் சிங்,  தலைமைக் காவலர்கள் ரோஹித் நைப்,  பினோத் (எ) வினோத் குமார்,  காவலர்கள் விரேந்தர் சிங் மாலிக்,  பினேஷ்  குமார்,  யஸ்பீர் சிங் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தில்லி காவல் துறையின் ஓய்வுபெற்ற ஆணையர்கள் டி.ஆர்.கக்கர்,  பி.கே. குப்தா,  நீரஜ் குமார்,  பி.எஸ்.பஸ்ஸி மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் பங்கேற்று, உயிரிழந்த காவலர்களின் நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தி,  இரு நிமிடம்  மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி காவல் துறை ஆணையர் அபிஷேக் குப்தா, நிகழ்ச்சி மேடைக்கு உயிரிழந்த காவலர்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை எடுத்து வந்தார்.  இந்தப் புத்தகத்திற்கு காவல் வாத்தியக் குழுவினர் இசை முழங்கி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com