நேதாஜியின் கொள்கைகளை செயல்படுத்துகிறது மோடி அரசு: பாஜக எம்.பி. பாராட்டு

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கொள்கைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கொள்கைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் உதித் ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 
ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற பெயரில் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நிறுவிய 75-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உதித் ராஜ் எம்பி  கூறியதாவது: 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக ஆயுத வழியில் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,  மத, இன வேறுபாடில்லாத இந்தியாவை உருவாக்கக் கனவு கண்டார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவரின் கனவை நனவாக்கப் பாடுபட்டு வருகிறது. நேதாஜியின் பல்வேறு  கொள்கைகளை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது.
ஆசாத் ஹிந்த் சர்க்காரை காங்கிரஸ் அரசு அங்கீகரிக்கவில்லை. ஆனால்,  அதை மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் பெரிய மாற்றத்தை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
இது தொடர்பாக கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி கூறுகையில், "60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நேதாஜியின் புகழ், அவர் உருவாக்கிய ஆசாத் ஹிந்த் சர்க்கார் ஆகியன திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஆனால், மோடி அரசு நேதாஜியின் புகழை பரப்புவதில் உறுதியாக உள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com