வாட் வரியை குறைக்க வலியுறுத்தல்: தலைநகரில் பெட்ரோல் நிலையங்கள் இன்று மூடல்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை தில்லியில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரியில் லிட்டர் ஒன்றுக்கு தலா ரூ.1.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் அறிவித்தார். இதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டர் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் குறைத்தன. மேலும், மாநில அரசுகளும் ரூ. 2.50 குறைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  மத்திய அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று, பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கப்பட்டது.
இதேபோல், தில்லியிலும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதே கோரிக்கையை  தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கமும்  வலியுறுத்தியது. ஆனால், இதுவரை தில்லி அரசு விலைக் குறைப்பு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
இது குறித்து தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் நிச்சல் சின்ஹானியா கூறுகையில் "தில்லியில் பெட்ரோல், டீசல் விலை கூடுதலாக உள்ளது. இதனால், விலை குறைவாக உள்ள ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களுக்குச் சென்று  தில்லிவாசிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொள்கின்றனர். 
இதன் காரணமாக, தில்லியில்  சுமார் 400 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சராசரியாக பெட்ரோல் விற்பனை 25 சதவீதம், டீசல் விற்பனை 50-60 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும், கோவா, சண்டீகர் போன்ற யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. இதை தில்லியிலும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். ஆனால், இது குறித்து தில்லி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அச்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
24 மணி நேரம் மூடல்: இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கும் விஷயத்தில் தில்லி அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து செவ்வாய்கிழமை காலை 6 மணி வரை தில்லியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை 24 மணி நேரம் மூட பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 

பாஜக ஆதரவு
பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் போராட்டத்துக்கு, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா ஆதரவு தெரிவித்துள்ளார். கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் அராஜகப் போக்கால் மக்கள் பாதிக்கப்படுகிறனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ள போதிலும், தில்லி அரசு தனது வாட் வரியைக் குறைக்கவில்லை. தில்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆத்மி அரசு தற்போது பெட்ரோலுக்கு வாட் வரியாக 27 சதவீதம் வசூலித்து வருகிறது. இதனால், லிட்டர் ஒன்றுக்கு வாட் வரியாக மட்டும் ரூ.17.56 வரை தில்லி அரசுக்குச் செல்கிறது. இதனால்தான் தில்லியில் பெட்ரோல் விலை மிக அதிகமாகவுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பல மாநில அரசுகள் விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆனால், மத்திய அரசின் வேண்டுகோளுக்கு தில்லி அரசு செவிசாய்க்கவில்லை. தில்லி அரசின் அலட்சியப் போக்கால் தில்லி மக்கள் மட்டுமல்லாமல், பெட்ரோல் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் ஒருநாள் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com