ரயில் நிலையங்கள் முன் நெரிசலை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவலர்கள்: வடக்கு ரயில்வே ஏற்பாடு

தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் முன் பகுதியில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில்

தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் முன் பகுதியில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில் போக்குவரத்துக் காவலர்களைப் பணியில் ஈடுபடுத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தில்லியில் உள்ள புது தில்லி, பழைய தில்லி மற்றும் ஹஜரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களின் முன் பகுதியில் இந்த போக்குவரத்துக் காவலர்கள் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கு ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் முன்பகுதியில் 
அங்கீகாரமற்ற கடைகள், கூவி விற்போர் ஆகியோரை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபடுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் தேவையான ஒழுங்குபடுத்தும் பணியையும் மேற்கொள்வர். அதன்படி, தில்லியில் உள்ள புது தில்லி ரயில் நிலையப் பகுதியில் 34 பேரும், பழைய தில்லி ரயில் நிலையப் பகுதியில் 26 பேரும், ஹஜரத் நிஜாமுதீன் ரயில் நிலையப் பகுதியிலும் 16 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
தேவைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அவர்கள் இரு "ஷிப்ட்'களில் மூன்று ரயில் நிலையங்களின் இரண்டு பக்க நுழைவு வாயில்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தில்லியின் கோட்ட ரயில்வே மேலாளர் ஆர்என் சிங் கூறுகையில்,"ரயில் நிலையப் பகுதியில் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் அல்லது வியாபாரிகள் குறித்தும் கண்காணிக்குமாறு போக்குவரத்துக் காவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் மற்றும் வளாகங்களில் நெரிசல் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவர்களின் வேலையாகும். மேலும், சந்தேக நபர்கள், சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் அல்லது ரயில்வே போலீஸாருக்கு நேரடியாக தகவல் தெரிவிக்குமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். இது கூடுதல் பாதுகாப்பை அளிப்பதாக அமையும். ரயில் நிலைய வளாகப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் கடை விரித்து வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிகள் மற்றும் போலீஸாருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். 
எனினும், நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுவிட்ட சில தினங்களில் மீண்டும் கடை வைத்து விடுகின்றனர். தற்போது போக்குவரத்துக் காவலர்களை பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் இதுபோன்று கடைகள் அமைப்பதற்கு வாய்ப்பு ஏற்படாது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com