ஹிந்துத்துவத்தை தூக்கி எறிந்துவிட்டது பாஜக: சிவசேனை தாக்கு

"ஹிந்துத்துவம்' என்ற ஏணியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக,  பின்னர் அதை தூக்கி எறிந்துவிட்டது என்று சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.

"ஹிந்துத்துவம்' என்ற ஏணியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக,  பின்னர் அதை தூக்கி எறிந்துவிட்டது என்று சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான "சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களவைத் தேர்தலில் ஹிந்துக்களின் ஆதரவால் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், ஹிந்துக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை.
இதனால், ஹிந்துக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களிடம் எந்தவிதமான அணுகுமுறையைக் கையாண்டதோ அதே விதமான அணுகுமுறையை ஹிந்துக்களிடம் பாஜக கையாண்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தரப்படும் என்றும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. ஹிந்துத்துவத்தை ஏணியாக பயன்படுத்திக் கொண்டு, பிறகு அதை பாஜக தூக்கி எறிந்துவிட்டது.
ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்று சிகாகோவில் நடைபெற்ற சர்வதேச ஹிந்து மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார். அத்துடன், ஹிந்துக்கள் அனைவரும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நரேந்திர மோடியை பிரதமராக்கினர். ஆனால், அதனால் கிடைத்த பயன் என்ன? 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பேரவை தேர்தலுக்கு முன், சிவசேனையுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம், ஹிந்துத்துவத்தின் முதுகில் பாஜக குத்திவிட்டது. ஹிந்துத்துவம் மற்றும் தேசத்துக்காக பேசி வருபவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் சிவசேனைக்கு இடம் அளிக்காதது ஏன்? ஹிந்துத்துவத்துக்காக சிவசேனை போன்று பாடுபட்டுவரும் பல அமைப்புகளுக்கும் அங்கு இடமளிக்கப்படவில்லை.
நேபாளத்தில் ஹிந்துத்துவத்துக்கு முடிவுகட்டப்பட்டு விட்டது. பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார். சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூடாரமாக நேபாளம் மாறிவிட்டது.
காஷ்மீரில் வசிக்கும் ஹிந்துக்கள், ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகளுடனும், பாகிஸ்தான் ஆதரவாளரான ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியுடனும் கைகோத்துக் கொண்டு காஷ்மீர் பண்டிட்டுக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். இதற்கெல்லாம், மோகன் பாகவத் கருத்து தெரிவிப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com