மகளிர் பாதுகாப்புக்காக 4,388 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: உயர் நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தகவல்

தில்லியில் பெண்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுமார் 4,388 சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைநகர் கா


தில்லியில் பெண்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுமார் 4,388 சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைநகர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தில்லி பல்கலை.யின் வடக்கு வளாகப் பகுதியில் சிறுநீர் மற்றும் விந்து அடங்கிய பலூன்களை தங்கள் மீது வீசியெறிந்ததாக சில பெண்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சில வழக்குரைஞர்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் நிகழாண்டு மார்ச் மாதத்தின்போது பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில், ஹோலி, புத்தாண்டு நிகழ்வுகளின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வழிகாட்டுநெறிமுறைகளை உருவாக்குமாறு கோரியிருந்தனர். மேலும், மகளிர் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், மகளிர் காவல் உதவி மையங்களை அதிகரிக்கவும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனுவை கடந்த மே 16-ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், தலைநகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தில்லி காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அமர்வில் ஒரு நீதிபதி இல்லாததால் இந்த விவகாரத்தை அமர்வு விசாரிக்கவில்லை.
பிரமாணப் பத்திரத்தில் தில்லி காவல் துறையினர் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் பெண்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுமார் 4,388 சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுநீர் அடங்கிய பந்து எறியப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு புகார்தாரர் ஒத்துழைக்கவில்லை. ஆகவே, வழக்கானது "கண்டறியப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விந்து அடங்கிய பலூன் எறிந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், புகார் அளித்த பெண்களின் ஆடையில் விந்து கறைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என தடயவியல் அறிவியல் ஆய்வக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com