களக்காடு தலையணையில் நீர்வரத்து: சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கக் கோரிக்கை
By DIN | Published on : 30th December 2016 06:18 PM | அ+அ அ- |
களக்காடு மலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் வியாழக்கிழமை காலை தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மூடப்பட்ட தலையணையை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களக்காடு மலைப்பகுதியில் உள்ள தலையணை ஆற்றில் குளிக்கவும், அங்குள்ள பசுமையை ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் நீர்வரத்து இருக்கும். கடும் வறட்சி நிலவினாலோ, பருவமழை பொய்த்தாலோ ஓரிரு மாதங்கள் தலையணை வறண்டுவிடும். இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு களக்காடு மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தலையணை மூடப்பட்டது. இங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கிய பின்னர் நீர்வரத்து வந்து விடும். அதன்பின்னர் தலையணை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகளிடையே நிலவியது. ஆனால் இதுவரையிலும் மலைப்பகுதியில் பெரிய அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது பெய்யும் மிதமான மழையால் ஓரிரு நாள்கள் மட்டுமே மிகக்குறைவான அளவில் நீர்வரத்து இருப்பதும், பின்னர் வறண்டுவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு மலைப்பகுதியில் உள்ள செங்கல்தேரியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து குறையுமா அதிகரிக்குமா என்பது மலைப்பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்துத்தான் உள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு வறண்டு கிடந்த தலையணை ஆற்றில் நீர்வரத்து காணப்படுவதால் மூடப்பட்ட தலையணையை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் தலையணையை திறக்க வாய்ப்பிருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.