குலசேகரம் அருகே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி: நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முயற்சிக்கு எதிராக கடை முன்பு ஊர்மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை முற்றுகையில் ஈடுபட்டனர்.

குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முயற்சிக்கு எதிராக கடை முன்பு ஊர்மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை முற்றுகையில் ஈடுபட்டனர்.
தக்கலை-குலசேகரம் சாலையில் வலியாற்றுமுகம் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் தற்போது உள்ளன. இந்நிலையில் வலியாற்றுமுகம்-பொன்மனை சாலையில் புதிதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடையை திறக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு லாரியில் மதுவகைகள் கொண்டு வரப்படவிருப்பதாக இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்தக் கடை முன்பு பெண்கள், குழந்தைகள் என ஊர்மக்கள் திரண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், பாஜக மாவட்டச் செயலர் ஷீபா பிரசாத், வழக்குரைஞர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் பொதுமக்களுக்கு ஆதரவாக திரண்டனர்.
இதையடுத்து குலசேகரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை கலைந்து போகுமாறு கூறினார். இதையடுத்து வழக்குரைஞர் கிருஷ்ணபிரசாத், ஸ்டாலின்தாஸ் ஆகியோர் தக்கலை ஏஎஸ்பி மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் செல்லிடப்பேசி வழியாகப் பேசினர். இதில் அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியது: வலியாற்றுமுகம் கிராமம் தலித்துகள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். குவாரிகளில் கல் உடைக்கும் தொழிலாளர்களும் இங்கு அதிகம். தற்போது இங்கு ஒரே கட்டடத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதால் கிராம மக்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பிற இடங்களிலிருந்து இங்கு வந்து மது வாங்குபவர்கள் இங்குள்ள விளை நிலங்களில் அமர்ந்து மது அருந்துவதால் விளை நிலங்கள் பிளாஸ்டிக் குப்பைகளால் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையோரங்களிலுள்ள விளை நிலங்களில் திறந்த வெளியில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதால் பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றனர். இப்பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறந்தால் இக்கிராமம் டாஸ்மாக் கிராமமாக மாறிவிடும். இதனால் இங்கு சமூக அமைதிக்கு பாதகம் ஏற்படும். எனவே இங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. மேலும் ஏற்கெனவே செயல்படும் கடைகளையும் மூட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com