மீனவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது

ஒக்கி புயலால் காணாமல்போன தமிழக, கேரள மீனவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஒக்கி புயலால் காணாமல்போன தமிழக, கேரள மீனவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக, கேரள மீனவர்கள் ஏராளமானோர் மகாராஷ்டிரம்,  குஜராத்,  லட்சத்தீவு போன்ற பகுதிகளில் பத்திரமாக கரையேறியுள்ளனர். இது தொடர்பாக அம்மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தியுள்ளோம். மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வசதியும் செய்துகொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடல் மார்க்கமாக ஊர் திரும்ப எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவியும் செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவில் உள்ள மீனவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இம்மாவட்டத்தில் புயல் பாதிப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சர், இணை அமைச்சருடன் பேசினேன். இந்நிலையில், ஆளுநரையும் சந்தித்து மீனவர் பிரச்னை குறித்து எடுத்துக் கூறியுள்ளேன். 
நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம், தோவாளை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளேன். மேலும் திருவட்டாறு, குலசேகரம் பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளேன். பல பகுதிகளில் இன்னும் மரங்கள் அகற்றப்படவில்லை. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. புயலால் இறந்தோருக்கு கேரள அரசு வழங்கும் உதவித்தொகைபோல தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும். 
குமரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். ஆனால் 500 பேர் மட்டுமே மத்திய அரசின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திருந்தால் மத்திய அரசின் இழப்பீடு கிடைத்திருக்கும். இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆட்சியர்கள் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து நான் வலியுறுத்தியும்,  மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.  
ஒக்கி புயலால் காணாமல்போன மீனவர்களை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தேடும் பணி நடைபெற்றுவருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com