உணவு வணிக நிறுவனங்கள் டிச.31-க்குள் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற வேண்டும்: ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் உணவு வணிக நிறுவனங்கள் டிச. 31ஆம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

குமரி மாவட்டத்தில் உணவு வணிக நிறுவனங்கள் டிச. 31ஆம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்வது உணவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 63இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆண்டு வணிக மதிப்பு ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் உரிமமும், தங்களுடைய வியாபாரத்தின் மதிப்பு ஆண்டுக்கு ரு. 12 லட்சத்துக்கும் கீழ் இருந்தால் பதிவுச் சான்றும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இம்மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், மறு பொட்டலமிடுபவர்கள், உணவகம் நடத்துபவர்கள், பேக்கரி, தேநீர் விற்பனையகங்கள், மளிகைக்கடை நடத்துபவர்கள், இறைச்சி விற்பனை செய்பவர்கள் (ஆடு, மாடு, கோழி, மீன்), விநியோகஸ்தர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள், எண்ணெய் விற்பனையாளர்கள், தனியார் பால் குளிரூட்டும் நிறுவனங்கள், பால் விற்பனை நிலையங்கள், காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள், இட்லி, தோசை மாவு அரைத்து விற்பனை செய்பவர்கள், மதுக்கூடங்கள், பள்ளி மற்றும் கல்லூரி உணவு விடுதி கேண்டீன்கள், உணவுப் பொருள்களை வாகனத்தில் எடுத்து செல்பவர்கள், வாகனத்தில் வைத்து விற்பனை செய்பவர்கள் வரை அனைத்து உணவுப் பொருள்களையும் தயாரிப்பு நிலையிலிருந்து பொதுமக்கள் உண்ணும் நிலை வரை உள்ள அனைத்து நிலையில் உணவு வணிகம் மேற்கொள்பவர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
உரிமம் அல்லது பதிவுச்சான்று இல்லாமல் உணவு வணிகம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் அல்லது அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
எனவே, மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் தாங்களே முன்வந்து உடனடியாக தங்களது வணிகத்துக்கு உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட நகர, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்களையோ, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு, டிச.31ஆம் தேதிக்குள் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்று வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும். அந்தந்த வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் உரிமம் அல்லது பதிவுச்சான்று வழங்கும் சிறப்பு முகாமை உணவு வணிகர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com