தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி மறுப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி

தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படாததற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி மறுப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி

தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படாததற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
விவசாயிகள்: வறண்டு கிடக்கும் சூழலை பயன்படுத்தி குளங்களை தூர்வார அனுமதி அளிக்க வேண்டும்.
ஆட்சியர்: கோடையில் குளங்களை தூர்வாரி வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில் புதிய அரசாணை வந்துள்ளது. அதன்படி தூர்வார வேண்டிய குளங்களின் பட்டியல் மாவட்ட அரசிதழில் 10 நாள்களில் வெளியிடப்படும். அதன்பிறகு அந்தந்த குளங்களின் புரவு விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான நிலவரி ரசீது, பட்டா நகல் போன்ற ஆவணங்களுடன் உரிய படிவத்தில் மனு கொடுக்க வேண்டும். மனு கொடுத்த 8 நாள்களுக்குள் ஒவ்வொரு விவசாயிக்கும் 30 கன மீட்டர் (சுமார் 10 டெம்போ) அளவுக்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அனுமதி வழங்கப்படும். அந்த மண்ணை விவசாயத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு தேவைகளுக்கு பயன்படுத்தினால் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
வின்ஸ் ஆன்றோ (பாசனத் துறை தலைவர்): புதிதாக வெளியிடப்படும் அரசிதழில் அனைத்துத் துறைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடிய சுமார் 4 ஆயிரம் குளங்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஆட்சியர்: அனைத்து குளங்களின் பெயர்களையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலவர் செல்லப்பா: தேவையில்லாத சட்டங்களை கூறி விவசாயிகளை அலைய விடக்கூடாது. ஆட்சியரிடம் மனு கொடுத்தாலே அனுமதி அளிக்க வேண்டும்.
பத்மதாஸ்: வில்லுக்குறி பாலத்தில் கனரக லாரிகள் அடிக்கடி உரசுவதால் பாலம் உடையும் அபாயம் உள்ளது.
விவசாயிகள்: கடற்கரையின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியம் மறுத்து வருகிறது. ஆனால் வணிக நோக்கில் மின் இணைப்பு வழங்குகிறார்கள். விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: கடற்கரை மேலாண்மை சட்டத்திலும் விவசாயத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால். விவசாயத்துக்கான மின் இணைப்புக்கு உத்தரவிடப்படும்.
விவசாயிகள்: பறக்கை பகுதியில் தென்னை மரங்களில் மரநாய்களின் தொல்லை இருப்பதால் அவற்றை பிடித்து வனத்தில் கொண்டு விடவேண்டும்.
அதிகாரி: வனத் துறையில் அதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டு வரும் 27ஆம் தேதிமுதல் 4 நாள்கள் முகாமிட்டு மரநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்: மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம். கேரளத்தில் இதை அரசு நிகழ்ச்சியாக நடத்துவது போன்று, இம்மாவட்டத்திலும் நடத்த வேண்டும்.
ஆட்சியர்: ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
விவாதத்தின் இடையே தமிழக அரசு ஒதுக்கியுள்ள வறட்சி நிவாண நிதி எந்தெந்த பயிருக்கு கிடைக்கும் என அதிகாரி அறிவிக்கையில், தென்னை விவசாயம் அட்டவணையில் இல்லை என்றார்.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இம்மாவட்டத்தின் முக்கிய பயிரான தென்னை விவசாயத்துக்கு நிவாரண நிதி ஒதுக்கப்படாததற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.98 லட்சம் தனியாக அரசிடம் கேட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் அமைதி அடைந்தனர்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் (பொ) சந்திரசேனன் நாயர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன், நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும்  விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com