படித்தவர்கள் பெற்றோர்களை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும்: சுற்றுலாத் துறை ஆணையர் பேச்சு

படித்தவர்கள் பெற்றோரை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்றார் தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் வி. பழனிகுமார்.

படித்தவர்கள் பெற்றோரை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்றார் தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் வி. பழனிகுமார்.
மரியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 9ஆவது ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும் பேசியது; கல்லூரிகள் மாணவர்களின் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதிலும், தரமான கல்வியை வழங்குவதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆசியர்கள் என்பவர்கள் மாணவர்களின் மனதை பக்குவம் செய்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் எப்போதும் மதிப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய சமூகத்தில் பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் தவறான கலாசாரம் உருவாகி வருகிறது. படித்தவர்கள் பெற்றோர்களை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நல்ல கல்வியை நமது தலைமுறையினருக்கு தந்துள்ளோமா என்ற சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எந்த மாணவரும் பயனற்ற மாணவர் இல்லையென்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது 500 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியே வரும் மாணவர்களில் 8 முதல் 12 சதம் வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே அனைத்து மாணவர்களும் வேறு, வேறு துறைகளில் சாதிக்கும் வகையில் கல்வி நிலைகள் அவர்களை தயார் செய்ய வேண்டும். சிரமமின்றி எதுவும் சாத்தியமாகாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். சமூகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களை ஒவ்வொரு ஆணும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றுப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் எப்போதும் காலியாக இருக்கின்றன. அது உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து எழுதுவதற்காக கூட இருக்கலாம் என்றார் அவர்.
விழாவுக்கு மரியா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. ஷைனி தெரசா குத்துவிளக்கேற்றினார். அருள்பணியாளர் சேவியர் சுந்தர் ஜெபம் செய்தார். கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி வரவேற்றார். முதல்வர் ஒய். சுஜர் அறிக்கை சமர்ப்பித்தார். மனோன்மணீயம் மற்றும் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் பி.பி. செல்லத்துரை, கல்லூரி துணை இயக்குநர் சாபுகுமார், தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் ஜெயகுமாரி, சித்தா கல்லூரி முதல்வர் செளந்தர்ராஜ், ஹோமியோபதி கல்லூரி முதல்வர் சஞ்சீவ் உள்ளிட்டோர் பேசினர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பிரிஜ்லால் ரூபன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் ஜி.ஆர். அல்போன்ஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com