களியக்காவிளை அருகே 2,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published on : 11th November 2017 01:36 AM | அ+அ அ- |
களியக்காவிளை அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2,600 கிலோ ரேஷன் அரிசியை பொதுமக்கள் பிடித்து வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
களியக்காவிளை அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளிக்கிழமை அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட மினிலாரியை, ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். தொடர்ந்து மினிலாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, விளவங்கோடு வட்ட விழங்கல் அலுவலர் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ், ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் பரக்குன்று பகுதிக்குச் சென்று ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்து, அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 2,600 கிலோ ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.