வன ஊழியர் தம்பதி கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

தேரூர் வன ஊழியர் தம்பதி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

தேரூர் வன ஊழியர் தம்பதி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
இது குறித்து, இக்கூட்டமைப்பின் தலைவர் செலஸ்டின், குமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்க பொதுச் செயலர் அந்தோணி ஆகியோர் தலைமையில் வந்தவர்கள் அளித்த மனு: சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தேரூர் சாலையில் வனக் காவலர் ஆறுமுகம், அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் 10 ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக 2011ஆம் ஆண்டே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் படுகொலைக்கு நியாயம் கேட்டு மாவட்ட மக்கள், தேரூர் பகுதி மக்கள், சிஐடியூ, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் போராடினர். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையான விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதே போல சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆறுமுகம், யோகீஸ்வரி தம்பதியின் மகன் முத்துக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தவர்கள் அளித்துள்ள மனு: என் பெற்றோர்கள் கொலை சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் 18 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் கொலையாளிகள் பயன்படுத்தியது அரசு துப்பாக்கி மற்றும் தோட்டா என விசாரணை அதிகாரிகள் முதலில் கூறினர்.
ஆனால் தற்போது விசாரணை அதிகாரிகளில் சிலர், எனது பெற்றோர் உடலில் இருந்து எடுத்த தோட்டாவும், குற்றவாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கியும் பொருந்தவில்லை என கூறிவருகிறார்கள். எனது பெற்றோர் கொலைக்கு, என் தாயாரின் பெயரில் புத்தேரி ஊரில் இருந்த 75 சென்ட் இடம் தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள்.
ஆனால் புத்தேரியில் என் தாய்க்கு அப்படி சொத்தே கிடையாது. மேலும் விசாரணை அதிகாரிகள் கூறும் குற்றவாளிகளுடன் எங்களுக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது. விசாரணை அதிகாரிகள் என் வீட்டிலிருந்து என் தந்தை, தாயின் செல்லிடப்பேசி மற்றும் சில சொத்து ஆவணங்களையும், இதே போல் என் பாட்டி, மாமாவிடம் இருந்தும் வாங்கிச் சென்றனர்.
இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நடந்தும் இதுவரை விசாரணை முடிவுக்கு வரவில்லை. விசாரணை அதிகாரிகள் செயல்படும் விதம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
எங்கள் பெற்றோரை ஒரு காவல் அதிகாரி செல்லிடப்பேசியில் மிரட்டி இருந்தது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. அரசும் எனக்கு வாரிசுரிமை அடிப்படையில் வனத்துறையில் பணி வழங்கவில்லை. எனவே இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com