நாகர்கோவில் கேந்திர வித்யாலய பள்ளிக்கு 16 நிரந்தர ஆசிரியர்கள்

நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு 16 நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு 16 நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து,  மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  நாகர்கோவில் கோணத்தில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா மத்திய அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டி  மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  முயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பிற்கு புதிதாக இரண்டு பிரிவுகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11 ஆம் வகுப்பிற்கு புதியதாக ஒரு பிரிவிற்கும் அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை அறிந்து உடனடியாக அப்பணியை பூர்த்தி செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரை வலியுறுத்தியதின் காரணமாக அப்பணி நிரப்பப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதற்காக, மக்களவைத் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20  லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நிறுவனங்களுக்கான சேவை நிதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கழகத்திலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தம் நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்பள்ளியில் தாற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவது அறிந்தவுடன் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 16 நிரந்தர ஆசிரியர்கள் நாகர்கோவில் கேந்திர வித்யாலயாவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com