பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்: நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம்

பெண் குழந்தைகளை பெற்றோர் மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டுமென நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் தெரிவித்தார்.

பெண் குழந்தைகளை பெற்றோர் மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டுமென நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாதவபுரம் மாதவராயர் பாலர் பள்ளி மன்ற 32ஆவது நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின்  தலைவர் டி.ரத்தினசாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் இ.முத்துசுவாமி வரவேற்றார். உப தலைவர் எம்.ஸ்ரீராமச்சந்திரன்,  பொருளாளர் எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் பி.கிருஷ்ணசுவாமி ஆண்டறிக்கை வாசித்தார். குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார்.
சுய உதவிக் குழுவினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோருக்கு பரிசுகளை வழங்கி நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் பேசியது: இன்றைய மாணவர்கள் அம்பேத்கர்,  காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும். இரு தலைவர்களும் மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து தந்தவர்கள். 
இன்றைய காலக்கட்டத்தில் மனிதநேயம் இல்லாத சூழ்நிலை அதிகரித்து வருகிறது. ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்வதில் சாதி,  மதம் பார்க்கக் கூடாது. முதியோர் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். நல்ல போதனைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவிட வேண்டும். தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது என்றார் அவர்.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   இணைச் செயலர் சுகேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com