கேரள போலீஸ் காவலில் இறந்த இளைஞரின் உடல் 17 நாள்களுக்குப் பின் சொந்த ஊரில் அடக்கம்

கேரள போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்த குமரி மாவட்ட இளைஞரின் சடலம் 17 நாள்களுக்குப் பின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.


கேரள போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்த குமரி மாவட்ட இளைஞரின் சடலம் 17 நாள்களுக்குப் பின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்தவர் சைமன் மகன் அனீஷ் (20). தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள தனது தாயின் சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவரை கேரள மாநிலம், அமரவிளை மதுவிலக்குப் பிரிவு போலீஸார், களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றப்பனவிளை பகுதியிலிருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனராம். 25 ஆம் தேதி அனீஷ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அனீஷின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மற்றும் உறவினர்களுடன் திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் இன்பசேகர் ஜூலை 26 ஆம் தேதி பேச்சு நடத்தியதையடுத்து அன்றைய தினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சடலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனீஷின் சடலத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி, கேரள மாநிலம் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனீஷின் சடலம் உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் களியக்காவிளைக்கு சடலம் கொண்டு வரப்பட்டது. களியக்காவிளை அருகே கேரள பகுதியான இஞ்சிவிளையில் வந்த போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து அனீஷின் சடலம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் கிள்ளியூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். களியக்காவிளை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com