மழை நின்றதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்வது நின்றுள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்வது நின்றுள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதியிலிருந்து பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் ஆறுகளில் வெளியேறியதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 
பெருஞ்சாணி அணையில் நீர்வரத்து குறைந்த போதும், கோதையாற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் பேச்சிப்பாறைக்கு வருவதால்,  அந்த அணைக்கு விநாடிக்கு 5, 974 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து உபரியாக 6, 179 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 
பெருஞ்சாணி அணைக்கு 2,322  கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. சிற்றாறு 1 அணைக்கு 268 கனஅடி நீர்வரத்து உள்ளது. அவை  அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. 
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாள்களாக மழை நின்றுள்ளது. சில பகுதிகளில் மட்டும் சாரல் பொழிந்தது. குழித்துறை ஆறு,  வள்ளியாறு, பரளியாறு, கோதை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.  இதனால் கரையோரப் பகுதிகளான வைக்கலூர், பருத்திக்கடவு, பனமுகம், மாமுகம், வாவரை, மங்காடு,  நெடும்பரம்பு ஆகியபகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 
தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம்,  அருமநல்லூர்,  சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களில் சூழ்ந்திருந்த வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com