மதுக்கூடத்தில் போலி மது விற்பனை: தம்பதி உள்பட 3 பேர் கைது

தக்கலை அருகே டாஸ்மாக் மதுக் கூடத்தில் போலி மதுபானம் விற்றதாக தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தக்கலை அருகே டாஸ்மாக் மதுக் கூடத்தில் போலி மதுபானம் விற்றதாக தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
குமரி மாவட்டம், தக்கலை அருகே மருந்துகோட்டை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே தனியார் பராமரிப்பில் மதுஅருந்தும் கூடம் செயல்பட்டு வருகிறது. 
இங்கு, மதுக்கடை திறப்பதற்கு முன்பாக, அதிகாலை நேரத்தில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து  மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில், தக்கலை உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ராதா ஆகியோர் அந்த மதுக்கூடத்தில் சனிக்கிழமை  சோதனை நடத்தினர். 
அப்போது, அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை ஆய்வு செய்தபோது,  அவை போலி மதுபானங்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மதுக்கூட உரிமையாளர் சேம்ராஜ் மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள வீட்டிலிருந்து மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுவது தெரிய வந்தது. ஆரல்வாய்மொழியில் குறிப்பிட்ட அந்த வீட்டில் போலீஸார் சோதனையிட்டு, அங்கு இருந்த 150-க்கும் மேற்பட்ட போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக, வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருந்த ஜெயசீலன், அவரது மனைவி சகாயஷீபா மற்றும் சுயம்பு  ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com