மகா சிவராத்திரி: இரணியலில் அருள்மிகு மகாதேவர் யானை மீது பவனி

இரணியல் மார்த்தாண்டேஸ்வரம் அருள்மிகு மகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இரணியல் மார்த்தாண்டேஸ்வரம் அருள்மிகு மகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, கலச பூஜை, சாயரட்சை தீபாராதனை, அத்தாழ பூஜை, புஷ்பாபிஷேகம், பாட்டுப் போட்டி, நாம ஜெப மகிமை, குருவின் பெருமை, சக்தி இல்லேயேல் சிவம் இல்லை, இந்துசமயத்தில் மனிதநேயம் என்ற பொருளில் ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்டவை நடைபெற்றன.
மகாசிவராத்திரியை முன்னிட்டு காலை 4 மணிக்கு பள்ளி உணர்த்துதல், அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், அகண்டநாமம் ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணிக்கு செண்டை மேளம் முழங்க, யானை மீது அருள்மிகு மகாதேவர் இரணியலில் ஒவ்வொரு சமுதாய கோயிலுக்கும் பவனியாகச் சென்றார். அப்பகுதி மக்கள் வீட்டின் முன் விளக்கேற்றி வெற்றிலை, பழம், பாக்கு, வண்ண மலர் வைத்து மகாதேவரை கற்பூரம் காட்டி வழிபட்டனர். பிறகு, பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  
11 நாள்கள் நடைபெற்ற சிவராத்திரி விழா ஏற்பாடுகளை மகாதேவர் அறக்கட்டளை தலைவர் கே.ஏ.எஸ். விநாயகம்,  செயலர் வழக்குரைஞர் செந்தில்குமார், துணைத் தலைவர் சச்சின்குமார், பொருளாளர் கிருஷ்ணகுமார் மற்றும்  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
களியங்காடு சிவபுரத்தில்... களியங்காடு சிவபுரம் அருள்மிகு சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, மகா கணபதி ஹோமம்,  அபிஷேகம், தீபாராதனை,  திருவாசகம் முற்றோதல், ராஜயோக தியானம், 83-வது சிவஜெயந்தியை முன்னிட்டு 83 தீபம் ஏற்றுதல், மகா பிரதோஷ அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் முருகன், செயலர் நாராயணன் நாயர், பொருளாளர் சின்னையன், துணைத் தலைவர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.
இதேபோல, பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலிலும், தோட்டியோடு சிவன் கோயிலிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில்...
கன்னியாகுமரி அருகே 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பஞ்சலிங்கபுரம் அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, காலை 7 மணிக்கு நித்தியபூஜை, 8 மணிக்கு மகாதானபுரம் பகவதி விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வருதல், 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியன நடைபெற்றன. சமபந்தி விருந்துக்கு மாநில பாஜக மருத்துவ அணிச் செயலர் டாக்டர் சி.என். ராஜதுரை ஏற்பாடு செய்திருந்தார்.
மாலை 4.30 மணிக்கு பிரதோஷம் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அகண்ட நாமம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு முதல்கால பூஜை, 10.30 மணிக்கு ஆன்மிக கலை நிகழ்ச்சிகள், 11.30 மணிக்கு மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம்கால பூஜை, 1 மணிக்கு பக்தி நிகழ்ச்சி, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம்கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம்கால பூஜை ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை (பிப்.14) காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல், மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு மகா புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு அன்னதானம் ஆகியன நடைபெறும். விழா ஏற்பாடுகளை பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகத் தலைவர் எம். சொக்கலிங்கம், செயலர் வி. குமார், பொருளாளர் ஏ.சிதம்பரம், துணைத் தலைவர் மதன்குமார், துணைச் செயலர் வி.என். சிவன், கோயில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் பி. சக்திவேல் மற்றும் பஞ்சலிங்கேஸ்வரர் சேவா சங்கம், இந்து இளைஞர் இயக்கத்தினர் உள்ளிட்டோர் இணைந்து செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com