கோதையாற்றில் பிடிபடாத முதலை: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கோதையாற்றில்  உலாவும் முதலை அவ்வப்போது தண்ணீருக்கு மேல் தலைகாட்டுவதால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக

குமரி மாவட்டம் கோதையாற்றில்  உலாவும் முதலை அவ்வப்போது தண்ணீருக்கு மேல் தலைகாட்டுவதால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக இந்த ஆற்றில் குளிப்பதற்காக இறங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டதில் பிரதான ஆறுகளில் ஒன்றாக கோதையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது.  இந்த அணையைக் கடந்து வரும் கோதையாறு, கடையாலுமூடு அருகே சிற்றாறுகளுடன் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. மேலும், திருவட்டாறு அருகே மூவாற்றுமுகத்தில் பரளியாறுடன் இணைந்து தாமிரவருணி ஆறாக அரபிக்கடலில் கலக்கிறது. கோதையாற்றில் கடையாலுமூடு அருகே ஒருநடைக்கல் பாலம் அருகே கடந்த வாரம் சுமார் 6 அடி நீளம்  தென்பட்டதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த முதலையைப் பிடிக்க வேண்டுமென்று வனத்துறையினரிடம் முறையிட்டனர். ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆற்றினுள் இறங்கி குளிக்க மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை: மேலும், கோதையாற்றில் ஒரு நடைக்கல், கூடல் கடவு, களியல், திற்பரப்பு தடுப்பணை என பல்வேறு பகுதிகளில் உள்ள படித்துறைகளின் பொதுமக்கள் குளிப்பது மற்றும் துணிகளை சலவை செய்வது குறைந்துள்ளது. முதலை வேவ்வேறு இடங்களில் அடிக்கடி தலைகாட்டுவதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவுவதாலும்,  சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடப்படுவதாலும் மக்கள் தொடர்ந்து அச்சப்பட்டு வருகின்றனர்.  சலவைத் தொழிலாளர்களின் பணியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, முதலையை தொடர்ந்து கண்காணித்து அதைப் பிடித்து அணைக்குள் கொண்டு சென்றுவிட   மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும்  துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com