வார்டு மறுவரையறையில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published on : 13th January 2018 01:00 AM | அ+அ அ- |
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் வார்டு மறுவரையறையில் மாற்றம் செய்ய வேண்டும் என பங்கு பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வார்டுகளை மறு வரையறைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தேவசகாயம் மவுண்டு பகுதியில் உள்ள வார்டு மறு வரையறையை மாற்றம் செய்ய வேண்டும் என பங்கு பேரவை மூலம் கோரிக்கை வலுத்துள்ளது.
இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மனு: ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டு கிராமம் 14 -ஆவது வார்டாக இருந்தது. இந்நிலையில் மறு வரையறையில் இதனை 18-ஆவது வார்டாக மாற்றியும், இப்பகுதியால் இருந்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களை 9வது வார்டுக்கு மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 9 -ஆவது வார்டில் சேர்க்கப்பட்ட எமது பகுதியில் உள்ள வாக்காளர்கள் அந்த வார்டில் சிறுபான்மையினராக மாற்றப்படும் சூழல் உள்ளது. எனவே 9ஆவது வார்டில் சேர்த்துள்ள எமது மக்களை 18 ஆவது வார்டிலேயே சேர்க்க வேண்டும், அல்லது எங்கள் கிராமத்தை சரிபாதியாக பிரித்து இரண்டு வார்டாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.