ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்கள் ஆய்வு செய்ய கிராம அளவில் குழு: ஆட்சியர் தகவல்

ஒக்கி புயலில் சிக்கி  காணாமல் போன மீனவர்கள் குறித்து விசாரணை நடத்தி இறந்ததாக அறிவிக்க கிராம அளவில் குழுக்கள்

ஒக்கி புயலில் சிக்கி  காணாமல் போன மீனவர்கள் குறித்து விசாரணை நடத்தி இறந்ததாக அறிவிக்க கிராம அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,  கிராம அளவில் ஒரு குழு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அந்தக் குழுவுக்கு வட்டாட்சியர் தலைவராக இருப்பார்.  விளவங்கோடு வட்டத்தில்  2 குழுக்களும்,  கல்குளம்,  அகஸ்தீசுவரம், தோவாளை வட்டங்களில் தலா ஒரு குழு என 5 குழுக்கள் அமைக்கப்படுகிறது. 
இந்தக் குழுவில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஒருவர், மீன்வளத்துறை உதவி இயக்குநர்,  கிராம ஊராட்சி அல்லது பேரூராட்சி அலுவலக அதிகாரி,  வரி வசூலிப்பாளர்,  கிராமத்தைச் சேர்ந்த 3 பேர்,  கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  இந்தக் குழு அமைப்பதற்கான முதல் கூட்டம் ஏற்கெனவே நடந்துள்ளது.  அதில், முக்கியமாக காணாமல் போன 149 மீனவர்கள் சம்பந்தமான விசாரணை நடத்தப்படும்.  
ஒக்கி புயலின்போது  தமிழகத்தில் மொத்தம் 197 மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.   இதில்,  குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 149 பேர்,   பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 39 பேர்,  பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 9 பேர்.
பிற மாவட்டங்களை பொறுத்தவரையில்   19 பேர் கடலூரைச் சேர்ந்தவர்கள், 16 மீனவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.  3 பேர் தூத்துக்குடியையும்,  ஒருவர் புதுக்கோட்டை  மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். 
இந்தக் குழுவிடம் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்தினர் குடும்ப உறுப்பினர் குறித்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.  அந்த விண்ணப்பம் குறித்து அந்தக் குழுவினர் முழுமையான விசாரணை நடத்துவார்கள்.  விசாரணை முடிந்த பிறகு கிராம அளவிலான குழு அறிக்கை தயாரித்து வட்டாட்சியர் மூலம் வருவாய் கோட்டாட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம்  அறிக்கை தாக்கல் செய்வார்கள்.  அவர்கள் ஒட்டுமொத்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பார்கள்.  பின்னர் குமரி மாவட்ட அரசிதழில்  இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.   அவ்வாறு அரசிதழில்  வெளியிடப்பட்டு 15 நாள்களுக்குள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காமல் இருந்தால், புதிய  அரசாணைப்படி காணாமல் போன மீனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.  அப்படி இறந்ததாக அறிவிக்கப்படும் மீனவரின் வாரிசுக்கு முதல்கட்டமாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.  வாரிசு பிரச்னை ஏற்பட்டால் சட்டபடி தீர்வு காணப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.  பின்னர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் வாரிசு ஆகியோரின் பெயரில் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு,  அந்தக் கணக்கில் ரூ. 10 லட்சம் செலுத்தப்படும்.   6 மாதங்கள் கழிந்த பின்னர்தான் அந்தப் பணம் வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.  கிராம அளவிலான விசாரணைக் குழுவினர் திங்கள்கிழமை முதல் (ஜன.15) தங்கள் பணியை தொடங்கிவிட்டனர்.    
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு  தமிழகத்தில் 22 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.  இதில்,  குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 18 பேர், 2 பேர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இதுவரை 33 மீனவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஒக்கியில் இறந்த மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.  கூடுதலாக 2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒக்கி புயலால் உயிரிழந்த குமரி  மாவட்ட   மீனவர்கள்  18 பேரில் 16 பேருக்கு ரூ. 3 கோடியே 20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  ஒரு மீனவருக்கு இன்னும் 2 நாளில் வழங்கப்பட இருக்கிறது.  ஒரு மீனவருக்கு வாரிசு தொடர்பான பிரச்னை இருப்பதால் விசாரணைக்கு பிறகு சட்டப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகள் 15  விவசாயிகளுக்கு தலா ரூ. 10  லட்சம் என்றஅடிப்படையில் ரூ. 1 கோடியே 50  லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.  
விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 4 ஆயிரத்து 857 பேர்,  அவர்களுக்கு ரூ. 77 லட்சத்து, 78 ஆயிரத்து 93, தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்ட 26 ஆயிரத்து 442 விவசாயிகளுக்கு ரூ. 9 கோடியே 37 லட்சத்து 8 ஆயிரம்,   இன்னும்   ஒரு வாரத்துக்குள்  அவர்களது  வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 
கேரள  மாநிலத்தில் கரை ஒதுங்கிய அடையாளம் காணமுடியாத 10 சடலங்கள் உள்ளன.  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியி ல் 2 சடலங்கள் இருக்கின்றன. இதுவரை 18 உடல்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் 247 பேர் டி.என்.ஏ. மாதிரிகள் சோதனைக்கு கொடுத்திருக்கிறோம்  என்றார்  அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com