டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் மனு

குமரி மாவட்டம்,  குருந்தன்கோட்டில் குடியிருப்பு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறந்திருப்பதற்கு பெண்கள்

குமரி மாவட்டம்,  குருந்தன்கோட்டில் குடியிருப்பு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறந்திருப்பதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள  நகர, கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் மனு அளித்தனர். 
குருந்தன்கோடு, ஆலன்விளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியில் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 2 டாஸ்மாக் கடைகள் மக்கள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்டது. 
இந்நிலையில் மூடப்பட்டதில் ஒரு மதுக்கடையை சில மாதங்களிலேயே மீண்டும் திறக்க அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். அப்போது மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் மறுபடியும் அந்த மதுக்கடை மூடப்பட்டது.  மேலும் போராட்டத்தின் போது டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குருந்தன்கோட்டில் அப்பகுதியில் மதுக்கடை திறப்பதில்லை என உறுதியளித்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, குருந்தன்கோட்டில் மதுகடையை திறந்துள்ளனர். அதன் அருகில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் போராடி அப்புறப்படுத்திய மதுக்கடை மீண்டும் திறந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் போராடியதால் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறந்திருப்பது அரசு அதிகாரிகளின் உறுதிமொழிக்கு மாறாக உள்ளது. எனவே குருந்தன்கோட்டில் திறக்கப்பட்ட மதுக்கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முன்சிறை ஏ.டி.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி பி.எஸ்.எம்.எஸ். 3 ஆம் ஆண்டு மாணவர் பிஜோய் தலைமையில் மாணவ, மாணவியர்  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: குமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், முன்சிறையில் அமைந்துள்ள ஏ.டி.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் 2014 - 15 ஆம் ஆண்டு சித்த மருத்துவருக்கான பி.எஸ்.எம்.எஸ். படிப்பில் 18 மாணவர்கள் இணைந்து படித்து வந்தோம். 
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் முதலாம் ஆண்டு தேர்வு அக்டோபர் 2016இ ல் முடிவடைந்து சில பிரச்னைகளுக்கு மத்தியில் எங்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இதுவரை மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை. இதே போல் 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிந்த தேர்வுக்கும் இதுவரை முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவராததால் எங்களால் மூன்றாண்டு படிப்பை தொடர முடியவில்லை. 
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. தேர்வு முடிவு வெளிவராததால் ஒரு வருடம் வரை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்களும், எங்கள் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்  என்று குறிப்பிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனு விவரம்: 100 நாள் வேலை திட்டம் மூலமாக கிராமங்களில் கூலி தொழிலாளிகள், ஏழைகள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவலாக 100 நாள் வேலை திட்டம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை தொழிலாளர்கள் பலர் வேலை இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். எனவே 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக தெரிவித்துள்ள நடைமுறையை அமல்படுத்தி ஏழைகள், மற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com