நாகர்கோவில் அனந்தன் குளத்தில் ஏப்.1முதல் படகு சவாரி: அதிகாரிகளுக்கு எம்.பி. அறிவுறுத்தல்

நாகர்கோவில் அனந்தன்குளத்தில்  வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் படகு சவாரி விடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

நாகர்கோவில் அனந்தன்குளத்தில்  வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் படகு சவாரி விடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விஜயகுமார் எம்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து, உள்ளூர் மக்களின் பொழுது போக்கிற்காகவும், குமரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலும் அனந்தன்குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இதையொட்டி,  சுற்றுலாத்துறை, நகராட்சி அதிகாரிகளுடன் படகு சவாரி அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விஜயகுமார் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.  மேலும், சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், படகு சவாரிக்கான அனந்தன்குளத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, அனந்தன்குளத்தில் படகு சவாரி விடுவதற்கு வசதியாக குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. அப்பணிகள் நிறைவடைந்து குளத்தில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
மேலும்,  படகுத்துறை அமைக்கப்பட்டு குளத்தில் சவாரி மேற்கொள்வதற்காக 6 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை விஜயகுமார் எம்.பி. செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கப்பட உள்ளதால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனந்தன்குளத்தில் படகு சவாரி தொடங்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, நாகர்கோவில் நகர அதிமுக செயலர் சந்திரன், ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் காரவிளைசெல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com