பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு பட்டணம் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கும் வழங்கப்படுமா?

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவை சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவை சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையில் உலக வங்கி நிதியான ரூ. 61.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்களுக்காக இந்த அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்த அணையிலிருந்து விநாடிக்கு 488 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை கால்வாய், அனந்தனாறு கால்வாய் மற்றும் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் ஆகிய கால்வாய்கள் வழியாக, குளங்களில் நிரப்பப்படுகிறது. இதில் அண்மையில் பெய்த மழையுடன் மற்றும் கால்வாய் தண்ணீரால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. இக்கால்வாய்களின் பாசனப் பகுதிகள் மற்றும் குளங்களில் பாசனப்பகுதிகளில் தற்போது கன்னிப்பூ சாகுபடிக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல வயல்களில் நாற்றங்கால்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சிற்றாறு பாசனப்பகுதிக்கு தண்ணீர் வேண்டும்: மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளாக சிற்றாறு பாசனப் பகுதிகள் உள்ளன. சிற்றாறு பட்டணம்கால்வாய் 43.069 கி.மீ. நீளம் கொண்டதாகும். இக்கால்வாய்க்கு பிரதான கிளைக்கால்வாய்களாக கருங்கல் மற்றும் புதுக்கடை கால்வாய்கள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பட்டணம்கால் பாசனப்பகுதிகளில் கோடை மழை மிகக்குறைவாகவே பெய்துள்ளது.
இந்நிலையில் இப்பகுதி குளங்களில் பெரும்பான்மையானவை வறண்ட நிலையிலேயே உள்ளன. மேலும் கிணறுகளிலும் தண்ணீர் மட்டும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. எனவே பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் பட்டணம்கால்வாயில் திருப்பி விடப்பட வேண்டுமென்று இக்கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து பட்டணம் கால்வாய் பாசன பகுதியான மேக்கோடு நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மவுண்ட்மேரி மனோகரன் கூறியது: பேச்சிப்பாறை அணையில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுவரும் நிலையில் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு தோவாளை, அகஸ்தீசுவரம் தாலுகா பகுதி குளங்கள் நிரப்பப்படுகின்றன. தற்போது அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதியாகக் காணப்படும் சிற்றாறு பட்டணம் கால்வாய் பாசனப்பகுதிகளுக்கும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவைத் தர வேண்டும். இதன் மூலம் பூவன்கோடு, வேர்கிளம்பி, சுவாமியார்மடம், பள்ளியாடி, நட்டாலம், கருங்கல், ஆலஞ்சி, மிடாலம், புதுக்கடை, பைங்குளம், விழுந்தயம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகள் நிரம்பும். மேலும் வாழை மற்றும் காய்கனிகள் சாகுபடியாளர்களும் அதிக அளவில் பயனடைவார்கள். எனவே பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com