குமரி மாவட்டத்தில் தொடர் மழை: முழுக் கொள்ளளவை எட்டும் அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாம்பழத்துறையாறு மற்றும் சிற்றாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
குமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகளான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு வரும் நீரின் வரத்து உயர்ந்து வருகிறது.
அதிக நீர்வரத்து காரணமாக மாம்பழத்துறையாறு, சிற்றாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாம்பழத்துறையாறு அணையில் தற்போது 54.05 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 54.12 அடியாகும். இதேபோன்று சிற்றாறு 1, சிற்றாறு 2  அணைகளில் முறையே 15.28 அடி, 15.38 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த இரு அணைகளின் மொத்த கொள்ளளவு தலா 18 அடியாகும்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக புத்தன் அணை, பெஞ்சாணி அணைப் பகுதியில் 3.3 செ.மீ. மழை பதிவாகியது. சுமார் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம், தற்போது 69.45 அடியாக உள்ளது. அணைகளுக்கு உள்வரவாக அதிக அளவு தண்ணீர் வருவதால், பொதுப்பணித் துறையினர் அணைப் பகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கால்வாய்களில் சுழற்சி முறையில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பாசனக் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், பழையாற்றின் கரைகளைப் பலப்படுத்தும்பொருட்டு, அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள்  மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com