பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் 16 இடங்களில் மறியல்: 1071 பேர் கைது; 12 பேருந்துகள் உடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, குமரி  மாவட்டத்தில் திங்கள்கிழமை 16  இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, குமரி  மாவட்டத்தில் திங்கள்கிழமை 16  இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 1,071 பேர் கைது செய்யப்பட்டனர்.  மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் 12 பேருந்துகள் சேதமடைந்தன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும், திங்கள்கிழமை (செப்.10) பந்த் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் செல்லசாமி தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன்,  நகரத் தலைவர் அலெக்ஸ்,  மாவட்டதுணைத் தலைவர் மகேஷ்லாசர், மகளிர் அணித் தலைவி தங்கம் நடேசன்,  மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இசக்கிமுத்து, சிபிஎம்எல் மாவட்டச் செயலர் அந்தோணி முத்து உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கருங்கலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஸ்குமாரும், திங்கள்நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்எல்ஏவும், கலந்துகொண்டனர். அவர்களையும் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.  இதே போல், கோட்டாறு, திட்டுவிளை,  மார்த்தாண்டம்,  மேல்புரம், குழித்துறை, கண்ணநாகம், நடைக்காவு, புதுக்கடை, நித்திரவிளை, ஈத்தாமொழி, கொட்டாரம் உள்பட 16 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் பங்கேற்ற 144 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1,071 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பந்த்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சின்னமுட்டம், தேங்காய்பட்டணம், குளச்சல் ஆகிய துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும், நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 
குலசேகரத்தில்... குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற மறியல்  போராட்டத்துக்கு திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார் இதில், திமுக திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் ஜாண்பிரைட், மாவட்ட பிரதிநிதி ஜோஸ்எட்வர்டு, மாவட்ட திமுக விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் அலாவுதின், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் றாபி, குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் விமல் ஷெர்லின் சிங், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்  65 பேர் கைது செய்யப்பட்டனர்
திருவட்டாறு: பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற மறியலுக்கு திருவட்டாறு கிழக்கு வட்டார  காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை வகித்தார். இதில்  முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலர் ஜ.ஜி.பி.  ஜாண்கிறிஸ்டோபர், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொன்மனை பேரூர் செயலர் ஜாண்சன், காங்கிரஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் ரெத்தினகுமார், ஜ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலர் வினு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருமனை:  அருமனை அஞ்சலக சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர். லீமாரோஸ், முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் மரிய செல்வி விலாசினி,  மாவட்டக் குழு உறுப்பினர் சசிகுமார், மேல்புறம் ஒன்றிய திமுக செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், அருமனை நகர  திமுக செயலர் பி.ஏ. தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கமலன், சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்  71 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கலை பகுதிகளில்...
திங்கள்நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர்கள் கிளாட்சன், ஜெரால்டு, கென்னடி, ஆர்.எம். டென்னிஸ்,  மீனவரணி தலைவர்  ஜோசப்மணி,  இளைஞரணி தலைவர் நரேந்திரதேவ், மாவட்ட துணைத் தலைவர் வேலுபிள்ளை, திமுக ரமேஷ்பாபு, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவானந்தம், வழக்குரைஞர் புஷ்பதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 110 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, குளச்சல் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் பேரணியாக ரவுண்டானா, ராதாகிருஷ்ணன் கோயில் சாலையை சுற்றி வந்து திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலையில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ் தொடங்கிவைத்து பேசினார். தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின், மதிமுக ஜே.பி. சிங் , காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ், ராஜேஷ்குமார், காந்தி இயக்கம் வழக்குரைஞர் பெல்ஜின், முஸ்லிம் லீக் அப்துல் ரஸீது, முன்னாள் எம்.பி. பெல்லார்மின் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் போராட்டம் குறித்து பேசினர்.
போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சைமைன்சைலஸ், ராஜன், சேது, அரங்கசாமி, நாகராஜன், காளிபிரசாத், திமுக நகரச் செயலர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெஜினால்டு, முன்னாள் நகர்மன்ற தலைவர் ரேவன்கில், ஒன்றியச் செயலர் அருளானந்தஜார்ஜ், வர்க்கீஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தக்கலை காமராஜர் பேருந்து  நிலையம் முன்பிருந்து மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 92 பேரை போலீஸார் கைது செய்தனர். 
நீதிமன்ற பணி புறக்கணிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பத்மநாபபுரம் நீதிமன்ற பணிகளைப் புறக்கணிப்பதாக வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் தினேஷ் தெரிவித்தார். 
பேருந்து மீது கல்வீச்சு: தக்கலை பகுதியில் 4 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக காட்டாத்துறையைச் சேர்ந்த சசியை போலீஸார் கைது செய்து விசாரணை 
நடத்திவருகின்றனர்.

கன்னியாகுமரி பகுதிகளில்...
குமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.பி. ராஜஜெகன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, வடக்கு வட்டாரத் தலைவர் காலபெருமாள், மாவட்ட விவசாய தொழிற்சங்க செயலர் மலவிளை பாசி, அகஸ்தீசுவரம் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் செயலர் எஸ்.எஸ். சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரகுநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் அரிகிருஷ்ணபெருமாள், பாக்கியசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

களியக்காவிளை பகுதிகளில்...
குழித்துறையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் தலைமை வகித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு உறுப்பினர்கள் இ. பத்மநாபபிள்ளை, ஏ. வின்சென்ட், குழித்துறை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் மாவட்டச் செயலர் இ.ஜி. ரவிசங்கர், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவர் ஜோசப் தயாசிங், குழித்துறை நகர திமுக செயலர் பொன். ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கிள்ளியூர் வட்டாரத்  தலைவர் வழக்குரைஞர் எஸ். ராஜசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகி டேவிட் உள்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 77 பேரை போலீஸார் கைது செய்தனர். கொல்லங்கோடு பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு செயலர் விஜயமோகன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 35 பேரை கொல்லங்கோடு போலீஸார் கைது செய்தனர். நடைக்காவு சந்திப்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். இங்கு சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 47 பேரை கொல்லங்கோடு போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com